நான் செய்தது தியாகம் அல்ல...நாட்டைப் பாதுகாக்க மேற்கொண்ட வியூகம் - கமல்
"மக்கள் நீதி மய்யம் கட்சியின் குரல் நியாயத்திற்காக தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்"
மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடாமல் இருந்தது தியாகம் அல்ல, தமிழ்நாட்டைப் பாதுகாக்க மேற்கொண்டுள்ள வியூகம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷுக்கு ஆதரவாக வீரப்பன்சத்திரம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "நான் இங்கே வந்திருப்பது பதவிக்காக அல்ல. எனது கட்சிக்காரர்களின் கவலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நான் இங்கு வரக் காரணம் நாட்டைக் காக்க வேண்டும் என்ற எண்ணம்தான். இந்த எண்ணம் தமிழனுக்கு எப்போதும் உள்ளது. தேர்தலில் போட்டியிடாமல் தியாகம் செய்து விட்டீர்களே என்று கேட்கிறார்கள். நான் செய்தது தியாகம் அல்ல. தமிழ்நாட்டைப் பாதுகாக்க மேற்கொண்டுள்ள வியூகம்" எனக் கூறினார்.
திமுக அரசு ஏழைகளுக்கான அரசு. அது இன்னும் சிறப்பாக இருக்க வேண்டுமென நான் முன்பு விமர்சனம் செய்தேன். ஆனால், மோசமானவர்களிடம் இருந்து நாட்டைக் காக்க தற்போது திமுகவை ஆதரிக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் குரல் நியாயத்திற்காக தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
நம் பிள்ளைகள் கல்வி கற்க காலை உணவுத் திட்டம் செயல்படுத்தும் அரசு வேண்டுமா? அல்லது நுழைவுத் தேர்வு என்ற பெயரில் கஷ்டம் கொடுக்கும் அரசு வேண்டுமா?. மகளிர் உதவித்தொகை தரும் அரசு வேண்டுமா? அல்லது பில்கிஸ் பானு குற்றவாளிக்கு மாலை போட்டு வரவேற்கும் அரசு வேண்டுமா? விவசாயத்தைக் காக்கும் அரசு வேண்டுமா? அல்லது விவசாயிகள் மீது போர் தொடுக்கும் அரசு வேண்டுமா? என கமல்ஹாசன் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். "எனவே திமுக வேட்பாளர் பிரகாஷை வெற்றி பெற செய்ய வேண்டும்" எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து கருங்கல்பாளையம், வெப்படை பகுதிகளிலும் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.
What's Your Reaction?