"என் குடும்பத்தை ஏன் இழுக்கிறார்கள்?" தெலங்கானா கூட்டத்தில் பிரதமர் ஆவேசம்!

எப்போது வேண்டுமானாலும் மக்களை சுரண்டலாம் என காங்கிரஸ் நினைத்துக் கொள்கிறது

Mar 5, 2024 - 13:57
"என் குடும்பத்தை ஏன் இழுக்கிறார்கள்?" தெலங்கானா கூட்டத்தில் பிரதமர் ஆவேசம்!

தெலங்கானாவை காங்கிரஸ் ஏ.டி.எம் இயந்திரம் போல் பயன்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் நலத்திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக நேற்று (மார்ச். 4) தமிழ்நாட்டில் பாஜக மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து தெலங்கானா சென்ற அவர், ரூ.7,000 கோடி ருபாய் மதிப்பிலான சாலை விரிவாக்கம், இயற்கை எரிவாயு அமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், குடும்ப அரசியலில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு வெளியே வங்கிக் கணக்குகள் தொடங்கி தங்கள் கறுப்புப் பணத்தை மறைத்து வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டினார். அதன்மூலம் நாட்டின் ஏழைகளை ஏழைகளாகவும் தங்களைப் பணக்காரர்களாகவும் மாற்றிக் கொண்டு வருகின்றனர் என்றும் அவர் சாடினார்.

காங்கிரஸ் கட்சி, தெலங்கானா மாநிலத்தை ஏடிஎம் இயந்திரம் போல் பார்க்கிறது எனக் கூறிய பிரதமர் மோடி, எப்போது வேண்டுமானாலும் மக்களை சுரண்டலாம் என காங்கிரஸ் நினைத்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நான் குடும்ப அரசியலை வெறுத்து, அதை செய்பவர்களைக் குற்றம் சொன்னால், அவர்கள் எனக்கு குடும்பம் இல்லை என இழிவு செய்கிறார்கள் எனப்பேசிய பிரதமர் மோடி, குடும்பம் என்பது கொள்ளையடிப்பதற்கான உரிமம் இல்லை எனவும் கூறினார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக ஸ்ரீ உஜ்ஜியினி மாகாளி கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். அதன் பின் அவரை முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மலர்க் கொத்துகளை வழங்கி வரவேற்றார். அதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் ரூ.350 கோடிக்கு வான்வெளி ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைத்தார். மேலும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் ஒடிசாவிலும் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow