பரந்தூரில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு - ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்

மச்சேந்திரநாதன் குழு அதனுடைய அறிக்கையை முழுமையாக வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

Dec 19, 2023 - 13:51
Dec 19, 2023 - 17:14
பரந்தூரில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு - ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்

பரந்தூர் பசுமை விமான நிலைய நிலம் கையகப்படுத்துவதற்கான ஆணையை திரும்ப பெற வேண்டும் எனக்கோரி  பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு சுமார் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டு அதற்கான அரசானையை சமீபத்தில் வெளியிட்டது.தமிழக அரசு அரசாணை எண் 210ல் 13 கிராமங்களில் இருந்து பட்டா நிலம் 3 ஆயிரத்து 774 ஏக்கரும் அரசு நிலம் 1972 ஏக்கரும் 1005 வீடுகள் 13 ஏரிகள் குட்டை குளம் என எட்டு கிலோமீட்டர் தூரம் உள்ள பம்பை கால்வாய் உட்பட இதில் பாதிக்கப்படுகிறது.மேலும் இந்த பரந்தூர் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் தொடர்ந்து 512 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதில் தொடர்பாக பல்வேறு நடவடிக்கையை தொடர்ச்சியாக எடுத்து வரும் நிலையில்,பரந்தூர் பசுமை விமான நிலைய நிலம் கையகப்படுத்துவதற்கான ஆணையை திரும்ப பெற வேண்டும்.மச்சேந்திரநாதன் அறிக்கையை வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக்குழு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 200க்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கிராமங்களை விவசாயிகளையும் அழித்து உருவாக்கும் இந்த திட்டத்தை கைவிட கோரி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் கூறுகையில், அரசு உடனடியாக அரசாணை 210 திரும்ப பெற வேண்டும். பொது மக்களை கருத்துக்களையும் அமைய உள்ள இடங்களையும் ஆய்வு செய்வதாக கூறி அமைக்கப்பட்ட மச்சேந்திரநாதன் குழு அதனுடைய அறிக்கையை முழுமையாக வெளிப்படையாக வெளியிட வேண்டும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும் எனவே இதனை சட்டத்தின் வாயிலாக நிலம் கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டு மாநில அரசு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நேரு, பரந்தூர் ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட கிராம கூட்டமைப்பு முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒட்டி காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை  தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow