தரங்கம்பாடியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக விளக்கிக் கொள்ளப்பட்டது

Dec 19, 2023 - 13:13
Dec 19, 2023 - 17:13
தரங்கம்பாடியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

தரங்கம்பாடி அருகே உளுந்து பயிருக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி 19 கிராம விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா "திருவிளையாட்டம் பிர்க்கா" வுக்கு (வருவாய் கோட்டம்)உட்பட்ட நல்லாடை, கொத்தங்குடி, அரசூர், எரவாஞ்சேரி, விளாகம், திருவிளையாட்டம் உள்ளிட்ட 19 கிராம விவசாயிகள் சுமார் 2500 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளாக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உளுந்து பயறு மற்றும் நெற்பயிருக்கான காப்பீட்டுத் தொகை சரிவர வழங்காததாலும், கடந்த ஆண்டு இக்கிராமங்களில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வேளாண்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டும், விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் காப்பீடு செய்தும் இது நாள் வரை இன்சூரன்ஸ் தொகை கிடைக்காததால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நல்லாடை முக்கூட்டு என்ற பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா, காவல் ஆய்வாளர்கள் சந்திரா, கருணாகரன், வருவாய்துறையினர் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்சூரன்ஸ் கம்பெனியிடம் பேசி விரைவில் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக விளக்கிக் கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தால் பொறையார், காரைக்கால், மற்றும் மயிலாடுதுறை செல்லும் மூன்று பிரதான சாலைகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow