பழநி முருகனுக்கு அள்ளிக்கொடுத்த பக்தர்கள்.. பங்குனி உத்திர விழா உண்டியல் வசூல் ரூ.5.29 கோடி
பழநி முருகன் மலைக்கோயிலில் 5 கோடியே 29 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படையான உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அண்மையில் பங்குனி உத்திரத் திருவிழா பழநியில் வெகுவிமர்சயைாக நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பழநி முருகன் கோயிலுக்கு வருகை தந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பங்குனி உத்திரத் திருவிழாவை தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வந்த நிலையில் அதிகளவில் வருகை தந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனால் கோயில் உண்டியல்கள் நிரம்பியது.
இதையடுத்து கோயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை கார்த்திகை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற எண்ணிக்கை முடிவில் ரொக்கம் ரு.5,29,34,887 கிடைத்துள்ளது. இது மட்டுமின்றி தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, கொலுசு, வேல், காவடி, மோதிரம் என 1,196 கிராம் தங்கமும், 21,783 கிராம் வெள்ளியும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் 717 கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளது.
இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
What's Your Reaction?