இரயில்வே சுரங்கப்பாதை பணி சுணக்கம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்...

சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரயில் மறியல்

Mar 14, 2024 - 15:38
இரயில்வே சுரங்கப்பாதை பணி சுணக்கம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்...

கோவை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கவில்லை என மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை மாவட்டம் கணபதி  செக்கான்தோட்டம் - பாலன் நகர் இடையே இருந்த இரயில்வே கேட்டை அகற்றி விட்டு சுரங்கப்பாதை  அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக பணிகள் மேற்கொள்ளப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்துடன் தண்டவாளத்தைக் கடந்து செல்வதாக கூறுகின்றனர். 

இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் சுரங்கப்பாதை பணியை மீண்டும் தொடங்க இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து இன்று (மார்ச் 14)  தண்டவாளத்தில் அமர்ந்து இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow