ராமர்பாண்டி கொலை வழக்கு.. 2 பேருக்கு குண்டாஸ்.. கரூர் ஆட்சியர் அதிரடி..
மதுரை அவனியாபுரம் ராமர் பாண்டி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் பாண்டி. இவர், கடந்த பிப்ரவரி 19ம் தேதி கரூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராகிவிட்டு இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் அவரை பின்தொடர்ந்த மர்ம கும்பல் அரவக்குறிச்சி அடுத்த தேரப்பாடி பிரிவு அருகே ராமர் பாண்டியை வெட்டிப் படுகொலை செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில், கடந்த பிப்ரவரி 21ம் தேதி 5 பேர் சரணடைந்தனர். பிப்ரவரி 23ம் தேதி சிவகங்கை நீதிமன்றத்தில் மேலும் ஒருவர் சரணடைந்தார். இந்நிலையில் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த வினோத் கண்ணன் மற்றும் கீரனூரைச் சேர்ந்த மகேஷ்குமார் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கரூர் மாவட்ட எஸ்.பி பிரபாகர் பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்படுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
What's Your Reaction?