ஊதியம் பெறாத நீதியரசர் சந்துரு - சாதிய மோதல்களை தடுக்க அறிக்கை தயாரிப்பு
ஏறத்தாழ 9 மாதங்கள் பணியினை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அறிக்கையினை தயாரித்து வழங்கி இருக்கின்றார்.
பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே ஏற்படும் சாதிய மோதல்களை தடுக்க பரிந்துரைகளை அளித்த ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அதற்காக ஊதியம் ஏதும் பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவனை சக மாணவன் கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மாணவர்களிடையே சாதிய மோதல்கள் அதிகரித்து வரும் நிகழ்வுகளை தடுத்திட தமிழக அரசுக்கு உரிய பரிந்துரைகள் அளிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைத்தது
மாணவர்கள் கல்வியாளர்கள் பெற்றோர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிடமிருந்து சாதிய மோதல்களை தடுக்க பரிந்துரைகளை பெற்று அறிக்கையாக தயாரித்த அவர் அறிக்கையினை நேற்று தமிழக முதலமைச்சரிடம் நேரடியாக சமர்ப்பித்தார்.
அதில் உடனடியாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதிய மோதல்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என அறிக்கை வடிவமைக்கப்பட்டது.
அந்த அறிக்கையில்,
பள்ளி, கல்லூரி மாணவர்கள் நெற்றியில் விபூதி குங்குமம் போன்றவை வைக்கக்கூடாது. கைகளில் வண்ண கயிறுகள் கட்டக்கூடாது. தற்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசுப் பள்ளிகளில், சாதிப் பெயர்கள் இடம் பெற்றிருப்பின் அவற்றை நீக்க வேண்டும்.
சாதிப் பெயர்களுடன் தனியார் பள்ளிகள் இயங்கி வந்தால் அந்த பெயர்களை நீக்க அந்தப் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை வேண்டுகோள் வைக்க வேண்டும் அதனை மீறுகின்ற பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளை அந்தந்த தனியார் பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித்துறை எடுக்க வேண்டும்.
புதிதாக தொடங்கப்படும் தனியார் பள்ளிகளுக்கு சாதிய பெயர்கள் இணைத்து சூட்டக்கூடாது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அவ்வப்போது பணியிட மாறுதல் செய்யப்பட வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புகின்ற போது அவ்வாறு நியமனம் செய்யப்படும் இடங்களில் நியமிக்கப்படும் அலுவலர் சார்ந்த சாதியின் ஆதிக்கம் அந்தப் பகுதியில் இல்லாத வகையில் நியமனங்கள் இருக்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் காவி மயமாக்கல் முயற்சி நடைபெறுவதாக எழுந்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.
ஆதிதிராவிட பள்ளிகள் கள்ளர் சீர் மரபினர் பள்ளிகள் மலைவாழ் மக்களுக்கான பள்ளிகள் என வெவ்வேறு பெயர்களில் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையின் கீழ் இணைத்து அரசு பள்ளிகள் என்று மட்டுமே அழைக்க வேண்டும்.
வகுப்பறைகளில் அகர வரிசைப்படி மட்டுமே மாணவர்களை அமர செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சாதிப் பெயர்களை வருகை பதிவேடுகளில் குறிப்பிடக் கூடாது.
மாணவர்களின் சாதி பதிவை கொண்டிருக்க கூடிய ஆவணங்களை அந்தந்த கல்லூரி மற்றும் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் அவற்றை ஆய்வு செய்யும் உயர் அதிகாரிகள் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்.
- உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தனர்.
இந்நிலையில், ஏறத்தாழ 9 மாதங்கள் பணியினை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அறிக்கையினை தயாரித்து வழங்கி இருக்கின்றார். இதற்காக அரசிடம் இருந்து மாதம் தோறும் ஊதியமோ அல்லது மதிப்பூதியமோ ஏதும் பெறமல் இலவசமாக முடித்து கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
What's Your Reaction?