தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் மாற்றம்... செளமியாவை களமிறக்கும் அன்புமணி...
அரசாங்கத்திற்கு பாமக கட்சி தொண்டர்களிடையே பெருமளவு ஆதரவு இல்லை !
தருமபுரி மக்களவை தொகுதியில், பாமக சார்பில் அரசாங்கம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தொகுதியில் அன்புமணியின் மனைவி சௌமியா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஜூன் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே, திமுக, அதிமுக, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும்பாலும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். அத்துடன் அனைத்து கட்சிகள் சார்பாக பரப்புரையும் துவங்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதனிடையே, பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமக, 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் தருமபுரி தொகுதியில் பாமக சார்பாக தருமபுரி மாவட்ட கிளை செயலாளர் அரசாங்கம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொகுதியில் தான் 2014ஆம் ஆண்டு பாமக தலைவர் அன்புமணி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதைதொடர்ந்து, 2019ஆம் ஆண்டு போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார். தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் பாமக சார்பில் அரசாங்கம் முன்னிறுத்தப்பட்டார்.
இந்நிலையில், அந்த தொகுதியில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது பசுமை தாயகம் அமைப்பின் தலைவரும், அன்புமணியின் மனைவியுமான சௌமியா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் மாற்றம் குறித்து விளக்கமளித்துள்ள பாமக, வேட்பாளராக நிறுத்தப்பட்ட அரசாங்கத்திற்கு பாமக கட்சி தொண்டர்களிடையே பெருமளவு ஆதரவு கிடைக்காததால், மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
What's Your Reaction?