பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்.. உச்சநீதிமன்றத்திற்கு முதலமைச்சர் நன்றி...!

ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வி அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

Mar 22, 2024 - 18:21
பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்..  உச்சநீதிமன்றத்திற்கு முதலமைச்சர் நன்றி...!

அமைச்சர் பொன்முடிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

2006ஆம் ஆண்டு முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, அப்போது சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை கையில் எடுத்த அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனால் அவரது பதவியும் பறிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்ததை அடுத்து, அந்த தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவரின் எம்.எல்.ஏ பதவி திரும்ப வழங்கப்பட்டது. அத்துடன் அவரை அமைச்சராக்க திமுக சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக திமுக உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒருநாள் கால அவகாசத்தில் பதவி பிரமாணம் செய்து வைக்க உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து, இன்று (22-3-24) ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வி அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் முக.ஸ்டாலினும் பங்கேற்றார். இதையடுத்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஜனநாயகம் கரைகிறது என்றும் கூட்டாட்சி வாடுகிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow