தொகுதி மக்களுக்காக கேள்வி கேட்ட சபாநாயகர்... வியந்த துரைமுருகன்... சட்டப்பேரவையில் சுவாரஸ்யம்!

சபாநாயகர் அப்பாவு, ''அமைச்சர் ரகுபதியிடம், ஸ்பீக்கருக்கும் (சபாநாயகர்) ஒரு கேள்வி இருக்கிறது. 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ், திசையன்விளை தாலுகாவில் கீழமை நீதிமன்றம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வேலைகள் எப்போது தொடங்கப்படும்?'' என்று கேள்வி எழுப்பினார்.

Jun 21, 2024 - 13:16
தொகுதி மக்களுக்காக கேள்வி கேட்ட சபாநாயகர்... வியந்த துரைமுருகன்... சட்டப்பேரவையில் சுவாரஸ்யம்!
சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை கூடியதும் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுவிடம் அதிமுக, பாமக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

''கேள்வி நேரம் முடிந்தவுடன் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி வழங்கப்படும்'' என்று   சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த அதிமுக, பாஜக, பாமக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

'அமைதியாக உட்காருங்கள்' என்று அப்பாவு அவர்களிடம் கூறியபோதிலும், எதிர்க்கட்சியினர் அரசை கண்டிக்கும் பதாகையை கையில் ஏந்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சபாநாயகர் உத்தரவின்பேரில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

அதிலும் அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமாரை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்று அவையில் இருந்து வெளியேற்றினார்கள். இந்த களேபரத்துக்கு மத்தியிலும் சட்டப்பேரவையில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று இன்று நடந்துள்ளது.

அதாவது அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு, கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து பேசினார்கள். அப்போது சபாநாயகர் அப்பாவு, எம்எல்ஏவாக மாறி தொகுதி குறித்து கோரிக்கை எழுப்பிய சுவாரஸ்ய சமபவம் நடந்தது.

இது தொடர்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு, ''அமைச்சர் ரகுபதியிடம், ஸ்பீக்கருக்கும் (சபாநாயகர்) ஒரு கேள்வி இருக்கிறது. 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ், திசையன்விளை தாலுகாவில் கீழமை நீதிமன்றம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வேலைகள் எப்போது தொடங்கப்படும்?'' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ரகுபதி, ''நேற்று மானாமதுரையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்களின் திறப்பு விழாவில் அங்குள்ள நீதிபதிகளிடம், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சட்டப்பேரவையில் இது தொடர்பான கோரிக்கையை எழுப்புவார்  என்று கூறியிருந்தேன். திசையன்விளை தாலுகாவில் கீழமை நீதிமன்றம் அமைக்க முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார். ஆகவே அங்கு மிக விரைவில்  கீழமை நீதிமன்றம் அமைக்கப்படும்'' என்றார்.

தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன், ''சட்டப்பேரவை கேள்வி நேரத்தில், சபாநாயகரே கேள்வி கேட்பதை இப்போதுதான் பார்க்கிறேன்'' என்று தனக்கே உரிய பாணியில் பேசினார். இதைக் கேட்டு சிரித்த சபாநாயகர் அப்பாவு, ''எனக்கும் தொகுதி மக்கள் ஓட்டு போட்டுள்ளார்களே. அவர்களுக்காக கேள்வி கேட்க வேண்டும் அல்லவா?'' என்றார். சபாநாயகர் பேசுவதை கேட்டு முதல்வரும், மற்ற உறுப்பினர்களும் சிரித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow