அழைப்பு இல்லாமல் சென்னை போனாரா அமைச்சர் கீதாஜீவன்?!

சென்னை மாநகராட்சி 192வது வார்டு பகுதியான நீலாங்கரையில் அவருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது

Dec 8, 2023 - 14:52
Dec 8, 2023 - 15:04
அழைப்பு இல்லாமல் சென்னை போனாரா அமைச்சர் கீதாஜீவன்?!

அழைப்பு இல்லாமல் மழை வெள்ள மீட்பு பணிக்கு சென்றாரா அமைச்சர் கீதா ஜீவன்.இதுதான் தூத்துக்குடி திமுக மத்தியில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.

மிக்ஜாம் புயல்  சென்னையை புரட்டி போட்டுவிட்டது. நகரின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதக்கிறது.சென்னையை சுற்றி இருக்கும் பகுதிகளை சேர்ந்த அமைச்சர்கள் மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.ஆனாலும் பொதுமக்களின் கோப பார்வையிலிருந்து அரசால் தப்பிக்க முடியவில்லை. ஆங்காங்கே அமைச்சர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் மக்கள் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கிறார்கள்.

இந்த நிலையில் கூடுதலாக ஏழு அமைச்சர்களை மீட்பு பணிக்கு செல்லுமாறு உத்தரவிட்டிருக்கிறது திமுக தலைமை.ஏற்கனவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு ஆகியோர் மழை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கூடுதலாக அமைச்சர்கள் சு.முத்துசாமி  ர.சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ.வேலு, சி.வெ. கணேசன், பி.மூர்த்தி ஆகியோரை சென்னை சென்று மழை வெள்ள சேத பகுதிகளை பார்வையிட அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த லிஸ்டில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவனின் பெயர் இல்லை. ஆனால் அவரும் சென்னை சென்று வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

அமைச்சர் கீதா ஜீவனின் எதிர் கோஷ்டி சேர்ந்தவர்கள் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள். அழைக்காமலேயே ஓடோடி சென்று நானும் இருக்கிறேன் என்று மழை வெள்ளத்தில் நடந்து சீன் போடுகிறார் அமைச்சர் கீதா ஜீவன் என்று சமூக ஊடகங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.

இது குறித்து அமைச்சரின் ஆதரவாளர்களிடம் கேட்டோம். "மழை வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு பணி செய்ய கூடுதலாக 7 அமைச்சர்களை திமுக தலைமை அறிவித்தது. அதில் அமைச்சர் கீதா ஜீவன் பெயர் இல்லை என்பது உண்மைதான். ஆனால் மழை வெள்ள மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கீதா ஜீவனுக்கு போன் போட்டு நீங்களும் சென்னை வந்து மீட்பு பணியில் ஈடுபடுங்கள் என்று  சொன்னார்.

அதைத் தொடர்ந்து தான் அமைச்சர் கீதா ஜீவன், ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு சென்னை சென்றார். இரண்டு லாரிகளில் நிவாரண பொருட்களை கொண்டு சென்றார். சென்னை மாநகராட்சி 192வது வார்டு பகுதியான நீலாங்கரையில் அவருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. முட்டி அளவுக்கு தேங்கி இருக்கும் தண்ணீரில் அவர் நடந்து சென்று மீட்பு பணி செய்வது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அது இங்கு உள்ள சிலருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பி இருக்கிறது. அதனாலயே அவன் ஒரு கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்கள்.

-எஸ்.அண்ணாதுரை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow