நெல்லை மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏன்?
மேயர் பொறுப்பேற்றதும் காண்ட்ராக்டர்களிடம் 25 சதவிகித கமிஷன் கேட்கிறார்.
நெல்லை மாநகராட்சியில் உள்ள மொத்த கவுன்சிலர்களின் எண்ணிக்கை 55, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி கட்சிகள் 51 வார்டுகளில் வெற்றி பெற்றன. தி.மு.க மட்டும் 41 வார்டுகளில் வென்றது.
தி.மு.கவைச் சேர்ந்த சரவணன் மேயரானார். இவர் அப்துல் வஹாப் எம்.எல்.ஏவிம் ஆதரவாளர், அவரதான் தலைமையிடம் ஒப்புதல் பெற்று சரவணனை மேயராக்கினார். மேயர் சரவணனை அப்துல் வஹாப் கைப்பொம்மையாக ஆட்டுவிக்க ஒரு கட்டத்தில் மேயர் வஹாப்பிற்கு எதிராக மாறிப்போனார்.இதனால் டென்சனான அப்துல் வஹாப் தனது ஆதரவு கவுன்சிலர்களை தூண்டி விட்டு மாமன்ற செயல்பாட்டை முடக்கினார். இதனால் மத்திய மாவட்டப் பொறுப்பாளர் பதவியை இழந்தார்.
இதற்கிடையில் தி.மு.க கவுன்சிலர்கள் தகராறு செய்து மன்றத்தை நடத்த விடுவதில்லை. இந்த விஷயம் முதல்வர் காது வரை சென்றதால் அடாவடி செய்த மூன்று கவுன்சிலர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பிரச்சினை முற்றுப்பெறும் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தபோது 38 தி.மு.க கவுன்சிலர்கள் கையெழுத்துப் போட்டு மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும்படி, கமிஷனர் தாகரே சுபம் ஞானதேராவிடம் மனு கொடுத்து பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்கள்.
இது குறித்து தி.மு.க கவுன்சிலர் வில்சனிடம் கேட்டோம்.அவர் கூறுகையில், கவுன்சிலர்கள் சொல்லும் எதையும் மேயர் செய்வதில்லை. யாரையும் மதிப்பதும் கிடையாது. எனவேதான் அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம் என்றார். ஆனால், பெயர் கூற விரும்பாத கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், மேயர் பொறுப்பேற்றதும் காண்ட்ராக்டர்களிடம் 25 சதவிகித கமிஷன் கேட்கிறார். அதை வாங்கிக் கொண்டு அப்படியே சென்று விடுகிறார், கவுன்சிலர்களுக்கு எதுவும் செய்வதில்லை. எனவே அவரை இனியும் விட்டு வைக்க முடியாது என்றார்.
மேயர் சரவணன் நமது போனை எடுக்கவில்லை. இதற்கிடையில் மேயர் மீது தி.மு.கவினவே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்திருப்பதால் உடனடியாய் மாமன்றத்தைக் கூட்டி விவாதம் நடத்த வேண்டும். அல்லது உடனடியாக மாமன்றத்தை கலைக்க வேண்டும். தி.மு.க மாமன்றத்தின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் தச்சை கணேஷ்ராஜா.
What's Your Reaction?