கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல்; போர்க்களமான பங்குனி திருவிழா!.. நடுங்கிய நிலக்கோட்டை

மேலும் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அப்பகுதியில், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Apr 5, 2024 - 11:13
கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல்; போர்க்களமான பங்குனி திருவிழா!.. நடுங்கிய நிலக்கோட்டை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடந்த முத்துமாரியப்பன் கோயில் திருவிழாவில் இரு சமூகத்தினர் இடையே முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கோஷ்டி மோதலால் பதற்றம் நிலவியது. கலவரத்தைக் கட்டுப்படுத்தியுள்ள போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நிலக்கோட்டையை அடுத்த அம்மைநாயக்கனூரில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனித் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டு கடந்த 26ஆம் தேதி, பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பொதுவாக 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் மண்டகப்படியில், அம்மன் பல அலங்காரங்களில் எழுந்தருளி நகர்வலம் வருவது வழக்கம். அதன்படியே இவ்வாண்டும் அம்மன் நகர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. அக்கம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பலரும் பக்திப் பெருக்குடன் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில், அம்மைநாயக்கனூரில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இரு கும்பலுக்கு இடையில் பல நாட்களாக முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திருவிழா தொடங்கியதில் இருந்தே இரு தரப்பினரும் அடிக்கடி முட்டிக் கொண்டும் முறைத்துக் கொண்டும் இருந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், திருவிழாவின் கடைசி நாள் வைபவம் நேற்று (ஏப்ரல் 4) நடைபெற்றது. அதில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முத்துமாரியம்மன் நகர்வலம் வந்து அருள் பாலித்தார். அப்போது கிடாய்வெட்டு, பூச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களைச் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். இதனால் ஊர் முழுவதும் கூட்டம் ஜே ஜே வென இருந்தது. இதைத் தொடர்ந்து இரவில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. மறுபுறம் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் இளைஞர்கள் ஆர்வத்தோடு பங்கேற்று வழுக்கு மரம் ஏறினர். அங்கும் முன்விரோதம் கொண்ட கும்பல் போட்டியிட வந்துள்ளது. 

அவர்கள் இரு தரப்பாக பிரிந்து வழுக்குமரம் ஏறியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு ஒருவர் வார்த்தையை விட, வாக்குவாதம் கைகலப்பு ஆனது. கூட்டத்தில் நடந்த கைகலப்பு, சற்று நேரத்தில் கலவரமாக வெடித்தது. ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட காட்சி, திருவிழாவைப் போர்க்களம் ஆக்கியது. 

அப்போது விரைந்து வந்த காவல்துறையினர், லேசான தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், காவல்துறை உதவியுடன் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று முடிந்தது. மேலும், கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அப்பகுதியில், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow