உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை:  நீதிமன்றம் அதிரடி

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை:  நீதிமன்றம் அதிரடி
Disciplinary action against officers who fail to implement order

சென்னை ஜார்ஜ்டவுனில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, சென்னை பெருநகர மாநாகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி காவல்துறைக்கு ஐந்து முறை கடிதம் எழுதியதாகவும், காவல்துறை பாதுகாப்பு அளிக்காததால் ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை எனக்கூறினார். 

காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், மாநாகராட்சி எழுதிய கடிதம் தெளிவாக இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அரசின் இரு துறைகளுக்கிடையே ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தால் அது பொதுமக்களை பாதிக்கும் எனக்கூறினர். 

அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்படுவது என்பது நிர்வாகத்தின் அடிப்படை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை தாமாக முன்வந்து இணைத்த நீதிபதிகள் நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். 

அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜனவரி ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow