`படையப்பா' பெயர் படை, சொறி என கிண்டல் செய்வார்கள் என ரவிக்குமார் தயங்கினார்: ரஜினிகாந்த்
ரஜினி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன ‘படையப்பா’ திரைப்படம் அவரது பிறந்த நாளான வரும் 12ஆம் தேதியை முன்னிட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரஜினி கெரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்றான ‘படையப்பா’ மீண்டும் வெளியிடப்படுவது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ‘படையப்பா’ படத்தின் உருவாக்கம் குறித்து ரஜினிகாந்த் சுவாரஸ்யமான வீடியோவை பேசி வெளியிட்டுள்ளார்.
”நான் கடந்த 1996-ல் ஜெயலலிதா குறித்து பேசியிருந்தேன். அப்போதுதான் படையப்பா படம் எடுத்துக்கொண்டிருந்தோம். நீலாம்பரி பாத்திரம் குறித்து அப்போது வதந்தி பரவியது.
படம் வெளியான பின்பு ஜெயலலிதா, படையப்பா படத்தைப் பார்க்க வேண்டும் என சொல்லியிருந்தார். சிலர் ஜெயலலிதாவிடம் படத்தை காண்பிக்க வேண்டாம் என பயந்தார்கள்.
அதில் என்ன இருக்கிறது என்றுகூறி, நான் பட ரீலை, போயஸ் தோட்ட இல்லத்துக்கு அனுப்பி வைத்தேன். படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என சொன்னார் என கேள்விப்பட்டேன். அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார்.
பொன்னியின் செல்வன் கதை எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் நந்தினி கதாபாத்திரம் அதிகமாக பிடிக்கும். அதற்காக நான் உருவாக்கிய படம்தான் படையப்பா. அதில், நீலாம்பரி என்றாலே ஐஸ்வர்யா ராய் தான் மைண்டுக்கு வருவார்
அவருக்காக பல மாதங்கள் காத்திருந்தோம். ஒருவேளை ஒரு வருடம் காத்தருக்க சொல்லி இருந்தால் கூட நான் காத்திருந்து இருப்பேன். ஏனென்றால் நீலாம்பரி பாத்திரம்தான் படமே. அதன் பிறகுதான் ஐஸ்வர்யா ராய்க்கு இதில் நடிக்க விருப்பம் இல்லை என தெரிந்தது.
அதன் பின் அவரை தொந்தரவு செய்யவில்லை. அதன் பின் ரவிக்குமார்தான் ரம்யா கிருஷ்ணன் பெயரை சொன்னார். எனக்கு அரைமனதாக இருந்தது. ஆனால் நேரில் அவர் கண்ணில் இருக்கும் பவரை பார்த்த பின் முடிவு செய்துவிட்டேன்"
படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என யோசித்த போது, டக்கென `படையப்பா' என தோன்றியது. என்னுடைய நிறைய்ய படங்களுக்கு நான் தான் தலைப்பு வைத்திருக்கிறேன். ஆனால் படை, சொறி என கிண்டல் செய்வார்கள் என ரவிக்குமார் தயங்கினார். இருந்தாலும் நான் என் பிடியிலிருந்து மாற மாட்டேன் என அவருக்கு தெரிந்ததால் சம்மதித்தார். பின்பு ஒரு முறை தயானந்த சரஸ்வதியை சந்தித்த போது இந்த தலைப்பை கூறினேன், அவர் அட ஆறுபடையப்பா போல் இருக்கிறது என்றார். பின்பு தான் முருகனின் வேல் இருப்பதை சேர்த்தோம்.
படையப்பா திரைப்படம் எந்த ஓடிடி தளத்துக்கும் உரிமம் கொடுக்கப்படவில்லை. இப்படம் திரையில் பார்த்து கொண்டாட வேண்டும்”. என அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
What's Your Reaction?

