தரமற்ற பட்டுப்புழு.. தீயிட்டு எரிக்கும் விவசாயிகள்: பல கோடி ரூபாய் நஷ்டம்!
பழனியருகே தரமற்ற பட்டுப்புழுக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பட்டுப்புழுக்களை தீ வைத்து எரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 4 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சுற்றிலும் ஏராளமான விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பழனி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டுப்புழு வளர்ப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கோவை, உடுமலை திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான இளம்புழு வளர்ப்பு மையத்தில் இருந்து, விஞ்ஞானிகளால் முட்டையின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, புழுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு புழுக்களாக வழங்கப்படுகிறது.
100 எண்ணிக்கை கொண்ட புழுக்கள், விவசாயிகளிடத்தில் 4000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பழனி பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இளம்புழு வளர்ப்பு மையத்தால் வழங்கப்பட்ட புழுக்கள் அனைத்தும் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இதனால் பட்டுப் புழுக்களை விவசாயிகள் தீயிட்டு எரித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு விவசாயிக்கும் 1.5 லட்சம் இழப்பீடு:
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, மத்திய மாநில அரசுகளின் கீழ் செயல்படும் இளம்புழு வளர்ப்பு மையத்தில் இருந்து கொடுக்கப்பட்ட பட்டுப்புழுக்கள் தரமற்றதாக உள்ளது என்றும், முட்டையை ஆய்வு செய்து கொடுக்க வேண்டிய நிலையில் ஆய்வு செய்தார்களா? என்பதே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இளம்புழு வளர்ப்பில் ஈடுபட்ட 15 நாட்களுக்குள் பட்டுப்புழுக்கள் அனைத்தும் கூடு கட்டவேண்டும். ஆனால் தற்போது 13 நாட்கள் ஆகியும் புழுக்கள் இலையை எடுத்துக்கொள்ளவும் இல்லை, கூடு கட்டவும் இல்லை. மேலும் புழுக்கள் அனைத்தும் உயிரிழந்து கீழே விழுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். பட்டுப்புழுக்களுக்கான காப்பீடு கடந்த ஆண்டு 9-வது மாதமே முடிந்துவிட்ட நிலையில், இதுவரை புதுப்பிக்க வில்லை என்றும், முறையாக காப்பீடு புதுப்பிக்கப்பட்டு இருந்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றும், அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கின்றனர்.
பட்டுப்புழுக்கள் இறப்பு குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்த போது மீண்டும் தரமான முட்டைகள் இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். தரமற்ற பட்டுப்புழு முட்டையால் பட்டுப்புழு விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் புழுக்களை விவசாயிகள் தீயிட்டு எரிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






