சிறையில் இருந்தே செந்தில்பாலாஜி செய்த சம்பவம்... போட்டுடைத்த திண்டுக்கல் ஐ லியோனி!
சிறையில் இருந்துக் கொண்டே செந்தில்பாலாஜி செய்த சம்பவம் குறித்து தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக உள்ள திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது. பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்புக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற அமர்வு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, 471 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த செந்தில் பாலாஜி வெளியே வந்தார். தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் செந்தில்பாலாஜியை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக உள்ள திண்டுக்கல் ஐ லியோனி, செந்தில்பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுகவை ஒடுக்க வேண்டும் என்பதற்காக மிக பெரிய தளபதியை, சிங்கத்தை 471 நாட்கள் கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தனர். இன்னும் பல நாட்கள் கூண்டுக்குள் வைத்திருந்தாலும் சிங்கத்தின் வலிமையை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை செந்தில் பாலாஜி நிலை நாட்டியுள்ளார். கூண்டுக்குள் இருக்கும்போதே தான் பொறுப்பு வகித்த மாவட்டத்தில் மிக பெரிய வெற்றியை கட்சிக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். அமலாக்க துறையின் அடக்குமுறை கரங்களால் போடப்பட்ட விலங்கு இன்று தூள் தூளாக உடைக்கப்பட்டு திமுக விற்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. 2026 ல் 200 மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெற செந்தில் பாலாஜி முன்னணி தலைவராக செயல்படுவார். ஒரு அரசியல் கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கைகாக 471 நாட்களை சிறையில் இருந்து தியாகம் என்று சொல்வதில் தவறு இல்லை. அவர் வகித்த அதே இலாகா உடன் அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என அனைவரும் தலைவருக்கு கோரிக்கை வைக்கிறோம்” என்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக உள்ள திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்தார்.
What's Your Reaction?