போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை... அரசு ஊழியர்களுக்கு பறந்த எச்சரிக்கை...
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், நாளை (பிப்.15) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளிலுள்ள 10% காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சட்டப்பேரவை தேர்தலின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததார். ஆனால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நாளை (பிப்ரவரி 15-ல்) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். அதைத் தொடர்ந்து வருகிற 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி இருக்கிறார். நிதி நிலைமை சீரானவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்றும் உறுதி அளித்தார்.
அமைச்சரின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் திட்டமிட்டபடி நாளை (பிப்.15) போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை பணிக்கு வரவில்லை என்றால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.
What's Your Reaction?