ஒரே மாதத்தில் லட்சாதிபதி - பிள்ளைகளைப் பிச்சை எடுக்க வைத்த கொடூர தாய் கைது
குழந்தைகளைப் பிச்சை எடுக்க வற்புறுத்தும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
மத்தியப் பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது 8 வயது மகள் மற்றும் 2 மகன்களைப் பிச்சை எடுக்க வைத்து ஒரே மாதத்தில் லட்சாதிபதியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் பகுதியில் இந்திரா பாய் (40) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது 8 வயது மகள் மற்றும் 2 மகன்களை இந்தூரில் உள்ள சாலைகளில் பிச்சை எடுக்க வற்புறுத்தியுள்ளார். இதன் மூலம் கடந்த 45 நாட்களில் சுமார் ரூ.2.50 லட்சம் பணம் சம்பாதித்துள்ளார். இதில் ரூ.1 லட்சத்தைத் தனது மாமியாருக்கு அனுப்பியதாகவும், ரூ.50 ஆயிரம் பணத்தை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததாகவும், ரூ.50 ஆயிரத்தை வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக முதலீடு செய்துள்ளார்.
இந்தூரில் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காகத் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பிச்சைக்காரர்களைப் பிடித்து அவர்களின் நிலை மற்றும் தங்கும் இடம் குறித்து தகவல்களை சேகரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தூர்-உஜ்ஜைன் சாலையில் உள்ள லவ்-குஷ் சந்திப்பில் இந்திராபாய் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரூபாலி ஜெயின் அவரிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது இந்திராபாய் ரூ.19,200 ரொக்கமாக வைத்திருந்தார். இந்தூர் நகரில் 150 பேரைக் கொண்ட பிச்சை எடுப்போர் குழுவில் இந்திராபாய் இருப்பதும், குறுகிய நாட்களில் பணம் அதிகம் சம்பாதிக்க முடியும் என்பதால் தனது பிள்ளைகளையும் இதில் வற்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
5 பிள்ளைகளுக்குத் தாயான இந்திராபாய் தனது 8 வயது மகள் உள்பட 3 பேரை வீதிகளில் பிச்சையெடுக்க வற்புறுத்தியுள்ளார். இந்திராபாய்க்கு ராஜஸ்தானில் சொந்தமாக நிலம், அடுக்குமாடு வீடு இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்திரா பாயின் கணவர் சமீபத்தில் தான் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் வாங்கியிருக்கிறார். இதில் இருவரும் ஊர் சுற்றி வருகிறார்கள் எனத் தொண்டு நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திராபாயின் மகன்கள் 2 பேர் தொண்டு நிறுவன ஊழியர்களைப் பார்த்ததும் ஓடிவிட்டதாகவும், 8 வயது சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறுமியை மீட்கும் போது ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திராபாயை காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?