ஸ்ரீபெரும்புதூர்: அகற்றப்படாத குப்பைகளால் தொற்றுநோய் அபாயம்

குப்பைகளை அகற்றுவதற்கு போதுமான வாகனங்கள் இல்லை.அதேபோன்று தூய்மை பணியாளர்களின் பற்றாக்குறையால்  குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது.

Nov 28, 2023 - 11:58
Nov 28, 2023 - 13:37
ஸ்ரீபெரும்புதூர்: அகற்றப்படாத குப்பைகளால் தொற்றுநோய் அபாயம்

ஸ்ரீபெரும்புதூர் பாரதிநகரில் 50 நாட்களுக்கும் மேலாக குப்பை கழிவுகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட  9வது வார்டு பாரதி நகரில் 600 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு உள்ள குடியிருப்புகளிலிருந்து தினமும் வெளியேற்றப்படும் குப்பை கழிவுகள் தெருக்களில் ஆங்காங்கே மலை போல கொட்டப்பட்டு கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பேரூராட்சி நிர்வாகத்தால் அகற்றப்படாமல் உள்ளது.இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

அதேபோன்று ஆங்காங்கே மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்று காட்சியளிக்கப்பட்டு வருகிறது.இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மேலும் குப்பைக்கழிவுகளில் இருந்து உருவாகும் கொசுக்களால் மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சமடைந்து வருகின்றனர் .

குப்பை கழிவுகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் புகார் தெரிவித்தும், எந்த பயனும் இல்லை என மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

இது குறித்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டதற்கு, குப்பைகளை அகற்றுவதற்கு போதுமான வாகனங்கள் இல்லை.அதேபோன்று தூய்மை பணியாளர்களின் பற்றாக்குறையால்  குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது.குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow