'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு எதிர்ப்பு; தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்

இரு தீர்மானங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார்

Feb 14, 2024 - 07:51
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு எதிர்ப்பு; தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது

நேரம் மற்றும் தேர்தல் செலவை குறைக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு மக்களவை, அனைத்து சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம் ஒரு வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தலாம் என பரிந்துரை செய்திருந்தது.

இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த 2-ம் தேதி உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

'ஒரே நாடு ஒரே தேர்தல்'  திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்த நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது என்றும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது. இந்த இரு தீர்மானங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார். அதன் பிறகு தீர்மானங்கள் மீது உறுப்பினர்களின் விவாதமும் நடைபெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow