டாக்டர்களுக்கு வேலையில்லை.. இளம் மருத்துவர்களுக்கு வாய்ப்பு தேவை..  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

தமிழ்நாட்டில் மருத்துவர்கள் மத்தியில் வேலை இல்லா திண்டாட்டம் உள்ளதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியுள்ளார். நீட் தேர்வை பல லட்சம் பேர் ஒரே கட்டத்தில் எழுதுவதுபோல் MRB தேர்வையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

May 4, 2024 - 18:27
May 4, 2024 - 18:39
டாக்டர்களுக்கு வேலையில்லை.. இளம் மருத்துவர்களுக்கு வாய்ப்பு தேவை..  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், தமிழ்நாட்டில் மருத்துவர்கள் மத்தியில் வேலை இல்லா திண்டாட்டம் உள்ளதாக குற்றஞ்சாட்டினார். 

இந்த நிலையில் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியமான எம்.ஆர்.பி.க்கு தேர்வுகளை அறிவித்து இருப்பதை வரவேற்பதாகவும், ஆனால் அதில் சில கோரிக்கைகள் தங்களுக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அரசு உதவி மருத்துவர்கள் பணியிடங்களுக்கான எம்.ஆர்.பி தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளை, தற்பொழுது பயிற்சி மருத்துவம் மேற்கொள்ளும் 8,000 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்களும் விண்ணப்பிக்க ஏதுவாக, மே 15-லிருந்து ஜூன் 30 வரை கால நீடிப்பு செய்ய வேண்டும் என்றும் இந்த கால நீடிப்பால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் ரவீந்திரநாத் கூறினார். 

நீட் தேர்வை பல லட்சம் பேர் ஒரே கட்டத்தில் எழுதுகின்றனர். எனவே எம்.ஆர்.பி. தேர்வை அனைவருக்கும் ஒரே நாளில் ஒரே கட்டமாக நடத்திடக் வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 

தமிழ்நாட்டில் மருத்துவர் 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து இருந்தாலோ, தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெற்று இருந்தாலோ, எம். ஆர். பி தேர்வில் தமிழ் தேர்வு அவசியம் இல்லை என்று அறிவிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யக் வேண்டும். தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை மாநில அரசும், மத்திய அரசும் பணியில் அமர்த்தக் கூடாது. 

மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தக் கூடாது. இது இளம் மருத்துவர்களுக்கான வேலை வாய்ப்பை பறிக்கும். ஓமந்தூரார் போன்ற பல்வேறு மருத்துவமனைகளில் ஓய்வு பெற்ற மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களை பணியில் இருந்து தமிழ்நாடு அரசு விடுவிக்கவேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவர் பணியிடங்களை உருவாக்கி, இளம் மருத்துவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசை ரவீந்திரநாத் கேட்டுக்கொண்டார். 

மேலும் பயிற்சி மருத்துவர்களை வைத்து மாவட்ட சுகாதார மையங்களில் வேலை வாங்கினால் அது நோயாளிகளின் நலனுக்கு எதிரானது. அங்கு முதுகலை படிப்பு முடித்த மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளை தனியார் மருத்துவமனையாக்கும் போக்கு தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இது மக்கள் நலனுக்கு எதிரானது. இந்த போக்கை மாநில அரசும் மத்திய அரசும் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

நாளை (மே 5) நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நீட் தேர்வு ஹால் டிக்கெட் பெறுவதில் மாணவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளதால் அதை மத்திய அரசு சரி செய்ய வேண்டும் என்று ரவீந்திரநாத்  கோரிக்கை விடுத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow