தமிழகம் உள்பட 12 மாநிலங்களுக்கு எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க டிச.11 வரை அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான படிவங்களை சமர்ப்பிக்கும் அவகாசத்தை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டிச.12 முதல் 15-ம் தேதிக்குள் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல், பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் தேர்தல் பணி, மழை நிவாரணப் பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் வருவாய்த் துறை அலுவலர்கள், பிஎல்ஓக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினரும், எஸ்ஐஆர் பணிக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதேபோல, கேரள மாநில அரசு ஊழியர்களும் காலநீட்டிப்பு கோரியிருந்தனர்.
எஸ்ஐஆர் பணிக்கு காலநீட்டிப்பு வழங்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: எஸ்ஐஆர் பணிகளை முடிப்பதற்கான அவகாசம் டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வாக்குச்சாவடிகளை சீரமைக்கும் பணிகளும் அன்றே நடைபெற உள்ளது. டிச.12 முதல் 15-ம் தேதிக்குள் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
எஸ்ஐஆர் பணி, புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி, எஸ்ஐஆர் நடவடிக்கையில் பெயர் நீக்கப்பட்டிருந்தால் அதன் மீது ஆட்சேபங்கள் தெரிவிப்பதற்கான காலக்கெடு டிச.16 முதல் ஜன.15 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?

