உதகை குளிர்ந்தது.. திடீர் மழையால் ஜாலி மூடில் சுற்றுலா பயணிகள்..
உதகை மற்றும் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் களிப்படைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டம் உதகையில் சமீப காலமாக கோடை வெயில் கொளுத்தி வந்தது. கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உதகையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானதாக தெரிகிறது. மேலும், நீலகிரி அருகே உள்ள குந்தா அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளில் வெயில் தாக்கத்தால் தண்ணீர் வற்றி பாளம் பாளமாக வெடித்து பாலைவனம் போல் காட்சி அளித்தன.
இந்த நிலையில், உதகை, குன்னூர் , கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடந்த 2 நாட்களாக இதேபோல மேகமூட்டம் காணப்பட்டு சில நிமிடங்கள் மட்டுமே மழை பெய்து மக்களை ஏமாற்றி வந்தது. ஆனால், இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. திடீர் கோடை மழையால் உதகை மீண்டும் குளிர்ந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் களிப்பு அடைந்துள்ளனர்.
இன்றைய தினம் பெய்த மழை, வெயிலால் காய்ந்துபோய் கிடந்த தரையை லேசாக நனைத்து ஈரப்பதமாக்கியுள்ளது. வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்து நீலகிரி மாவட்டம் தப்பிக்கும்.
What's Your Reaction?