கர்ப்பக்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன?
ஊட்டச்சத்து மற்றும் உணவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர், தர்ஷினி சுரேந்திரன். கோவையில் வசிக்கும் இவர், கிளினிக் ஒன்றை நடத்தி வருவதுடன், உணவியல் சார்ந்த ஆலோசனைகளும் தருகிறார். குமுதம் சிநேகிதி இதழுக்காக அவர் வழங்கிய சிறப்பு நேர்க்காணலின் தொகுப்பு பின்வருமாறு-

யாருக்கெல்லாம் ஆலோசனைகள் தருகிறீர்கள்?
"நாங்கள் உணவியல் நிபுணர்கள் மூவர் இணைந்து, ஆன்லைனில் ஆலோசனைகள் தருகிறோம். குழந்தையின்மை, தைராய்டு, பிசிஓடி பிரச்னை உள்ளவர்கள், தாய்மையடைந்த மகளிர் எனப் பலருக்கும் ஆலோசனைத் தகிறோம். ஆரம்பத்தில் ஆன்லைனில் மட்டும்தான் ஆலோசனைகள் கொடுத்தோம். தற்போது, வார இறுதி நாள்களில் நேரடியாக ஆலோசனைத் தருகிறோம்."
குழந்தையின்மைப் பிரச்னைக்கு உணவுப் பழக்கங்களும் காரணமாக இருக்கிறதா?
"இன்றைய வாழ்க்கைமுறை, உடற்பயிற்சியின்மை மட்டுமல்லாமல்; உணவுப் பழக்கங்களும் இதற்கு முக்கியக் காரணம். உணவின் தரமும் இன்றைக்குக் குறைந்துவிட்டது. பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும், உணவிற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. 'எதையாவது சாப்பிட்டுவிட்டு, வேலைக்குப் போகவேண்டும்' என்ற மனநிலையில் ஓடுகிறார்கள். உறங்கும் நேரமும் மிகவும் குறைந்துவிட்டது. கொரோனாவிற்குப் பிறகு, வீட்டிலிருந்து வேலைசெய்யும் நிலை வந்த பின்னர், பலரும் இரவு 12 மணிக்கு மேல்தான் தூங்குகிறார்கள். இது, நிச்சயம் ஹார்மோன்களை பாதிக்கும்".
குழந்தையின்மைக் குறைபாட்டை 'டயட் பிளான்'கள் மூலமாகச் சரிசெய்திருக்கிறீர்களா?
"நிறையவே சரிசெய்துள்ளேன். 'செயற்கை முறைக் கருத்தரிப்பு' (IVF) முயற்சித்து தோல்வியடைந்தவர்கள் கூட, எங்களிடம் ஆலோசனைப் பெற வந்துள்ளார்கள். நாங்கள் அறிவுறுத்தியபடி உணவுப் பழக்கங்களை மாற்றிக்கொண்டு, கருத்தரித்திருக்கிறார்கள்."
இளவயதில் வரக்கூடிய சர்க்கரை நோய்க்கும் உணவுக்கும் தொடர்பிருக்கிறதா?
ஆமாம்! முன்பெல்லாம் 40 வயதிற்கு மேல்தான் பலரையும் 'சர்க்கரை நோய் பாதிக்கும். ஆனால், தற்போதைய உணவுப் பழக்கவழக்கத்தால் 40 வயதிற்குள்ளாகவே 'சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் உள்ளன"
என்ன மாதிரியான ஆரம்ப அறிகுறிகள் தென்படும்? அதை எப்படிக் கண்டறிவது?
'HbA1c' என்கிற பரிசோதனையின் மூலமாக 3 மாதங்களுக்கு சராசரியான சர்க்கரை அளவைக் கண்டறியலாம். அதன்படி, சர்க்கரை அளவு 5.7-க்கு மேலே சென்றால், அதைச் சர்க்கரை நோயின் முந்தைய அறிகுறியாகக் கொள்ளலாம். தவிர, இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் அதிகமிருக்கும். கழுத்துப் பகுதியில் கருமைப் படர்ந்திருக்கும். சிலருக்கு அடிவயிற்றில் அதிகமாக சதை சேரும்”.
உடற்பருமனைக் குறைக்க, உங்களுடைய 'டயட் பிளான்' என்ன?
"ஒவ்வொரு வாரத்திற்கும் தனித் தனியாக 'டயட் பிளான்' தருவோம். சத்துக்குறைபாடுகள் இருந்தால், அதனைச் சரிசெய்யும் வகையில் உணவுகளைப் பரிந்துரைப்போம். 3 முதல் 6 மாதங்களிலேயே நல்ல மாற்றம் தெரியும்".
கர்ப்பக்காலத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் எவை?
‘ராகி, சிறுதானியங்களில் செய்த உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். தினசரி உணவில் புரோட்டீன் சத்து இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, ராஜ்மா சேர்க்கலாம். நிறைய காய்கறிகள் சாப்பிடுவது பலன் தரும். முருங்கைக்கீரை சூட், கீரைக் கூட்டுகள், நார்ச்சத்து நிறைந்த பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக ரெடிமேட் உணவுகளைத் தவிர்த்து வீட்டில் சமைக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. கடைசி 3 மாதங்களில் மோர், இளநீர் நிறைய உட்கொள்வதன் மூலமாக உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கமுடியும்.
உணவு விஷயத்தில் குழந்தைகள், 40+ வயது பெண்களுக்கு தங்களுடைய அறிவுரை?
"இப்போதெல்லாம் குழந்தைகளும்கூட 'உடற்பருமன்' (Obesity) பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 'ரோல் மாடல் பேரன்டிங்' என்று சொல்வோம். அதாவது. குழந்தைகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதற்கு முதலில் பெற்றோரே முன்மாதிரியாக இருக்க வேண்டும். 'ஆலு சப்பாத்தி’ போல காய்கறிகளை 'ஸ்டஃப்' செய்து தரலாம். மஞ்சள், பீட்ரூட் போன்ற இயற்கை நிறங்கள் சேர்த்து, வண்ணமயமாக வெவ்வேறு வடிவங்களில் காய்கறிகளில் சமைத்துத் தரலாம். பெரியவர்களுக்கு வைட்டமின் 'டி' மற்றும் கால்சியம் குறைபாடு அதிகமுள்ளது.
சூரிய வெளிச்சம் நம் உடலில் படாததால்தான் வைட்டமின் 'டி' குறைபாடு ஏற்படுகிறது. இதற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம். நடைப்பயிற்சி செய்வதோடு, ப்ரோக்கோலி, சோயாபீன்ஸ், பனீர், மீன் உணவுகள் எடுத்துக்கொள்வது நல்லது. தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். 40 வயதில் சாப்பிடுவதுதான் 60 வயதில் பிரதிபலிக்கும் என்பதை மறக்காதீர்கள்".
வயது வித்தியாசமின்றி பலரும் 'செரிமானப் பிரச்னை'யால் அவதிப்படுகிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு?
தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்வது. வாழ்க்கை முறை, நேரம் தவறிய உணவுப் பழக்கங்களால் ஜீரணம் ஆகாதபோது தான் 'Acidity’ ஏற்படுகிறது. காரம் எடுத்துக்கொள்வது. மைதா, பால் ஆகியவை சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவை அவர்கள் ஒதுக்கவேண்டும். ஓமம். சோம்பு, சீரகம் ஆகியவற்றைப் பொடித்து, வெந்நீருடன் ஒரு ஸ்பூன் கலந்து பருகலாம்”.
What's Your Reaction?






