பட்ஜெட்டில் அறிவித்த ரூ.20 கோடி எங்க சார்... அரசு மருத்துவமனையில் தெரு நாய்கள்...

Feb 28, 2024 - 20:33
பட்ஜெட்டில் அறிவித்த ரூ.20 கோடி எங்க சார்... அரசு மருத்துவமனையில் தெரு நாய்கள்...

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் படுக்கையில் நாய்கள் படுத்து கிடப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த மருத்துவமனையில் பொதுமான சிறப்பு மருத்துவர்கள் இல்லாதது, சுகாதார சீர்கேடு, திடீர் மின்தடையால் நோயாளி உயிரிழப்பு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, மருத்துவமனையின் உள்நோயாளி பிரிவில் நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக கூறப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.  மருத்துவமனை நிர்வாகமும் நாய்களின் தொல்லையினை கண்டுகொள்ளாமல் இருப்பதால் நோயாளிகள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர்.

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொதுமக்களுக்கான மருத்துவமனையாக அல்லது கால்நடைக்கான மருத்துவமனையாக என்ற வித்தியாசம் தெரியாத அளவிற்கு காய்ச்சல் வார்டு, ஆர்தோ வார்டு, குழந்தை வார்டு என அனைத்து முக்கிய வார்டுகளிலும் உள்ள நோயாளிகளின் படுக்கையில் நாய்கள் படுத்து கொண்டும், அங்கும் இங்கும் திரிந்து வருகிறது. நாய்களை விரட்ட முயற்சித்தால் கடிக்க பாய்ந்து வருவதால் பொதுமக்களும், நோயாளிகளும் பீதியும், அச்சமும்  அடைந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்தையும் தலையிட்டு அலட்சியமாக செயல்படும் மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், மருத்துவமனையில் இதுபோன்ற சீர்கேடு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரில் தெருநாய்களை கட்டுப்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அரசு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow