"நாளை நேரில் ஆஜராக வேண்டும்" - அகிலேஷ் யாதவ்-க்கு சிபிஐ சம்மன்...
உத்திரப்பிரதேசத்தில் சட்டவிரோத சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் நாளை வியாழக்கிழமை (29.02.2024) விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சட்டவிரோதமாக சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அந்தக் காலகட்டத்தில் உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக அகிலேஷ் யாதவ் இருந்தார். அத்தோடு 2012-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அம்மாநிலத்தின் சுரங்கத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ கடந்த 2019 ஜனவரி 2-ஆம் தேதி இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த சுரங்க ஊழல் விசாரணையானது 2016-ம் ஆண்டு முதல் விசாரணையில் இருந்து வரும் நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை மோடி அரசு தவறாக வழிநடத்தி வருவதாகக் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டிய நிலையில், அகிலேஷ் யாதவ்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், நாளை(28.02.2024) டெல்லியில் உள்ள சிபிஐ முன் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?