பேரவையில் முதன்முறையாக பட்ஜெட்..! பட்டியலை அடுக்கிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு! தமிழுக்காக இத்தனை திட்டங்களா?
தமிழகமெங்கும் உள்ள அரிய நூல்களை மின் பதிப்புகளாக கொண்டுவர அரசுத் திட்டமிடப்பட்டுள்ளது
மக்களவைத் தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் முதன்முதலாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடி திறந்தவெளி அரங்கம் அமைக்க 17 கோடி ரூபாய், 3 ஆண்டுகளில் 600 முக்கியத் தமிழ் நூல்கள் வெளியீடு என தமிழ் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
காட்சிக்கு எளியன் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது உரையைத் தொடங்கிய அவர், தன்னைக் காண வருவோரை எளியவனாகவும், கடுஞ்சொல் பேசாதவனாகவும் விளங்கும் அரசனை நாடே புகழ்பாடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு புகழாரம் சூட்டினார். தொடர்ந்து சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையின் வரலாறுகளை பட்டியலிட்டுப் பேசிய அவர், 100 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகள் தமிழர்களின் வாழ்வை தலைநிமிர்த்தியது எனக்கூறினார். சமூக நீதி, கடைக்கோடி நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன் காக்கும் சமத்துவப் பாதை, பசுமைவழிப் பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 கொள்கைகளே 7 மாபெரும் தமிழ் கனவுகள் எனவும் அவர் தெரிவித்தார்.
சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தமிழ் மொழி பயன்பாட்டுக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்குவதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் 600 முக்கியத் தமிழ் நூல்கள் வெளியிடப்படும் எனவும் அவர் அறிவித்தார். கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், மருங்கூர் உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறிய அவர், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரிய நூல்கள், ஆவணங்களை மின்பதிப்பாக மாற்ற 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவாகவும் தெரிவித்தார். தமிழரின் தொன்மை குறித்து எதிர்கால தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழகமெங்கும் உள்ள அரிய நூல்களை மின் பதிப்புகளாக கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.கீழடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்க 17 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?