தமிழ் புத்தாண்டு - விஷூ பண்டிகை..கோயில்களில் குவிந்த மக்கள்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதலே சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் குவிந்த மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அந்த வகையில் சென்னை வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி மூலவர் முருகப்பெருமான் தங்க நாணய கவசம், தங்கவேலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. பெருவுடையாருக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, மஞ்சள், அரிசி, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் உலகப் புகழ்பெற்ற குடவரை கோயில்களில் மிகவும் பிரசித்த பெற்ற தலமாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் திகழ்கிறது. குரோதி தமிழ் வருடப்பிறப்பையொட்டி மூலவர் கற்பக விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவர் தங்கக் கவசத்திலும் உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளிய விநாயகரை பக்தர்கள் தரிசித்தனர்.
கேரளாவில் விஷு பண்டிகை இன்று கொண்டாடப்படுவதால் கன்னியாகுமரியில் வாழும் மலையாள மக்கள் வீடுகளிலும், கோயில்களிலும் விஷு கனி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர். குறிப்பாக பழமை வாய்ந்த மீனச்சல் கிருஷ்ணசாமி திருக்கோயில், வெட்டுவெந்தி சாஸ்தா கோயில், ஆற்றூர் கல்லுப்பாலம் மஹாதேவர் ஆலயம், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில்களில் வைக்கப்பட்டிருந்த விஷு கனி தரிசனமும் நடைபெற்றது.
What's Your Reaction?