கொளுத்தும் கோடை வெயில்... உணவில்லாமல் உயிரிழக்கும் கால்நடைகள்...
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக உணவு கிடைக்காமல், 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோடைவெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக வெப்ப அலை வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி, முதுமலை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. வனப்பகுதிகளில் பசுந்தீவனங்கள் இல்லாததால் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, நீர்நிலைகளும் வறண்டு போயுள்ளதால், போதிய தண்ணீரும், உணவும் கிடைக்காமல் மசினகுடியில் உள்ள பசு மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதாக கால்நடை உரிமையாளர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 50 பசு மாடுகள் உயிரிழந்துள்ள நிலையில், கோடை மழையும் இதுவரை பெய்யாமல் இருப்பதால், மிச்சமிருக்கும் கால்நடைகளுக்கு உணவளிக்க என்ன செய்வது எனத் தெரியவில்லை என கால்நடை வளர்ப்போர் கலக்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், கால்நடைகள் அடுத்தடுத்து இறந்ததால், பால் உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதிகாரிகளும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தங்களுக்கு அரசு உரிய நிவாரண தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?