சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடத் தடை இல்லை - உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊதிய உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து சாம்சங் ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சென்னை திருப்பெரும்புதூரில் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 25 நாட்களுக்கும் மேலாக சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. போராட்டம் நடத்தி வருகிற சாம்சங் ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுவிட்டதாகத் அரசுத் தரப்பில் இருந்து தகவல் வெளியான நிலையில் போராட்டக்குழுவினர் இதனை முழுமையாக மறுத்திருக்கின்றனர். இந்நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போராட்டத்தை தொடர எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இது குறித்து போராட்டக் குழு தரப்பு வழக்கறிஞர் திருமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
“சாம்சங் ஊழியர்கள் கடந்த 30 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அக்கோரிக்கைகளில் சாம்சங் ஊழியர்களுக்கென தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் அடங்கும். அந்த சங்கத்தை தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பு நேற்று இரவு திடீரென தொழிலாளர்கள் பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். இந்த சட்டவிரோத கைதுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. அதில் போராட்டம் நடத்த எந்த தடையும் இல்லை நீதியரசர் ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் சாம்சங் நிறுவனத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் போராட்டம் தொடர்ந்து நடத்தலாம் என்றும், காவல்துறைக்குத் தொந்தரவு இல்லாமல் எங்கள் போராட்ட நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில் போராட்டக்காரர்களை காவல் துறையினர் எந்தவிதமான தொந்தரவும் செய்யக்கூடாது என்றும், போராட்டத்தை ஒடுக்க நினைக்காமல் தொழிலாளர்களுக்கு வேண்டியதைச் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய வேண்டுமெனில் மத்திய அரசு சட்டப்படி 45 நாட்களும், மாநில அரசு சட்டத்தின் படி 60 நாட்களுக்குள்ளும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்கிற விதி உள்ளது. சாம்சங் நிறுவனம் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதை ஏற்றுக்கொள்ளவில்லை.
சாம்சங் தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால் போராட்டம் கைவிடப்பட வாய்ப்பு இல்லை. சங்கமாக பதிவு செய்தால் சங்கம் எழுப்புகிற கோரிக்கையை சட்டத்திற்கு உட்பட்டு சந்திக்க வேண்டும் என்பதற்காகவே சங்கத்தினைப் பதிவு செய்வதை தொடர்ந்து சாம்சங் நிர்வாகம் எதிர்க்கிறார்கள்” திருமூர்த்தி தெரிவித்தார்.
What's Your Reaction?