இதுநாள் வரை ட்ரைலர்தான்.. இனிதான் அக்னி ஆட்டம் ஆரம்பம்.. வெப்ப அலையை அனுபவிக்க தயாராகுங்கள்
அக்னி நட்சத்திர காலம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்காலில் இன்றும் நாளையும் கடுமையான வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும் காலத்தை அக்னி நட்சத்திரம் என்கிறோம். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த மூன்றும் சூரியனுக்கு உரிய நட்சத்திரங்கள். ‘அக்னிர்ந: பாது க்ருத்திகா’ என்கிறது வேதம். அதாவது, கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை ‘அக்னி’ அதனால் இந்த நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் நேரமானது அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றது.
சூரியன் பயணம் சித்திரை மாதம் மேஷம் ராசியில் தொடங்கி பங்குனி மாதம் மீனம் ராசியில் முடிகிறது. அசுவினியில் பயணத்தை தொடங்கும் சூரியன், கார்த்திகை நட்சத்திரம் துவங்குவதற்கு இரண்டு பாதங்கள் முன்பாக அதாவது, பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்திற்குள் சூரியன் நுழையும் காலம் முதல் கார்த்திகை முடிந்து இரண்டு பாதம் வரை அதாவது ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதம் வரை சூரியன் சஞ்சரிக்கும் கால அளவினை அக்னி நட்சத்திர காலம் என்கின்றனர்.
சூரியன் வெப்பம் தகிக்கும் இந்த கால கட்டத்தை கத்திரி வெயில் காலம் என்றும் கூறுகின்றனர். இது தோஷகாலமாக கருதப்படுகிறது. எனவேதான் இந்த கால கட்டத்தில் சுப நிகழ்ச்சிகள் செய்வதை தவிர்த்தனர். வெப்பமும் அதிகமாக இருக்கும் சில நேரங்களில் அக்னி நட்சத்திர காலத்தில் கோடை மழையும் அதிகமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் நாளை ( மே 4) முதல் அக்னி நட்சத்திர காலம் ஆரம்பமாகிறது. வெப்ப அலை வீசி வரும் இந்த நிலையில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. மே 27 வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும்.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு புதுச்சேரி காரைக்காலில் இன்றும் நாளையும் கடுமையான வெப்ப அலை வீசக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெலுங்கானா, உள் கர்நாடகா, கடலோர ஆந்திரா, யானம், குஜராத், ஒடிசாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப அலை வீச கூடும்.
கடலோர கர்நாடகா, தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் கேரளா மற்றும் மாஹேவில் அடுத்த 5 நாட்கள் வெப்பம் அதிகமாக இருக்கும்.
அதே போல் நாளையிலிருந்து 6ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அக்னி வெயிலுக்கு ஆறுதலாக கூலான அறிவிப்பும் வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழ்நாட்டில் இன்றிலிருந்து அடுத்த ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?