உயிர்த்து எழுந்தார் இயேசு பிரான்!.. தேவாலயங்களில் பாடல் பாடி சிறப்பு பிரார்த்தனை...

வாடிகனில் உள்ள தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் பெருவிழா நடைபெற்றது.

Mar 31, 2024 - 04:10
உயிர்த்து எழுந்தார் இயேசு பிரான்!.. தேவாலயங்களில் பாடல் பாடி சிறப்பு பிரார்த்தனை...

ஈஸ்டர் திருநாளையொட்டி உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததை குறிக்கும் வகையில் உலகம் முழுவதும் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (மார்ச் 30) இரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

உலகப்புகழ் பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஈஸ்டர் திருநாள் விழா நடைபெற்றது. பாஸ்கா திருவிழிப்பு சடங்கில், இயேசு பிரான் உயிர்த்து எழுந்ததைக் குறிக்கும் வகையில் பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது. கலை அரங்க வளாகத்தின் மையப்பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் இருதயராஜ் அரங்கத்தின் மேடைக்கு எடுத்துச் சென்றார். பின்னர் பிரார்த்தனைகள் தொடங்கின.

தொடர்ந்து இரவு 12 மணி அளவில் வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கத்தின் மேற்கூரையில் சிலுவையை கொடியை ஏந்தியபடி யேசு பிரான் உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

இதேபோல மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் உள்ள செயின்ட் மைக்கேல்ஸ் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள செயின்ட் தெரசா தேவாலயத்தில் இருளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். கேரளா, டெல்லி, கோவா என இந்தியா முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் உள்ளம் உருகி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மேலும், இத்தாலி நாட்டின் வாடிகனில் உள்ள தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் பெருவிழா நடைபெற்றது. இதில், சுமார் 6,000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி, இயேசு பிரானை வரவேற்று பாடல் பாடி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow