போலி பாஸ்போர்ட் தயாரித்து வழங்கியதாக  5 பேர் கைது

5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Dec 14, 2023 - 15:01
Dec 15, 2023 - 17:27
போலி பாஸ்போர்ட் தயாரித்து வழங்கியதாக  5 பேர் கைது

போலி பாஸ்போர்ட்  தயாரித்து இலங்கை தமிழர்களுக்கு வழங்கியதாக  5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே போலி பாஸ்போர்ட் தயாரித்து  இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கியதாக  5 பேரை குற்ற புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் தயாரித்து இலங்கை வாழ் தமிழர்களுக்கு வழங்குவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி,தஞ்சாவூர் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது டிச.12ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பட்டுக்கோட்டை ரயில் நிலையம் அருகே போலீசார் கண்காணித்தபோது ஆண்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (64) என்பவர் போலி பாஸ்போர்ட் ஒன்றினை கும்பகோணம் மேல வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த வடிவேல் மற்றும் ராஜாமடம் பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த சங்கர் ஆகியோரிடம் கொடுத்தபோது போலீசார் சுற்றி வளைத்து மூவரையும் பிடித்து விசாரித்தனர்.

அதில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பதற்கு உடந்தையாக திருச்சி உறையூரைச் சேர்ந்த சுந்தர்ராஜ், கும்பகோணம் மகாமக குளம் பகுதியைச் சேர்ந்த ராஜு மற்றும் பகுருதீன் ஆகியோர் இருந்தது தெரியவந்தது.

இதைஅடுத்து தஞ்சை ஏ.டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு அந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று இரவு பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி  முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து  நீதிபதி சத்யா உத்தரவிட்டதை தொடர்ந்து, 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக  வழக்கில் சேதுபாவாசத்திரம் காவல் நிலைய எழுத்தர் சேஷா மற்றும் அவரது உதவியாளரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow