தமிழ்நாட்டில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.. வீடு தேடி வரும் அதிகாரிகள்.. எப்போது வரை செலுத்தலாம்

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரும் 18ஆம் தேதி வரை வாக்களிக்கலாம் என சத்ய பிரதா சாகு தகவல்

Apr 4, 2024 - 11:03
Apr 4, 2024 - 13:00
தமிழ்நாட்டில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.. வீடு தேடி வரும் அதிகாரிகள்.. எப்போது வரை செலுத்தலாம்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 
இதற்காக அரசியல் கட்சித்தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வீடுகளை விட்டு வெளியே வர முடியாத வாக்காளர்கள், எளிதாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துவதற்காகதான் தபால் வாக்குப்பதிவு முறை கொண்டு வரப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத மூத்த குடிமக்கள், 40 சதவீதத்துக்கு குறைவில்லாத மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண் பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அந்த வகையில் தமிழ்நாட்டில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 4) தொடங்கியது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இன்று தொடங்கிய இந்த தபால் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை 3 நாட்களும் காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெறுகிறது. 

3 நாட்களில் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தகவல் அளிக்கப்பட்ட தேதியில் 12 -டி விண்ணப்பம் அளித்துள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முகவரியில் இருக்க வேண்டும்.  அப்போது வீட்டிற்கு வரும் அலுவலர்களிடம், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்தை காண்பித்து தபால் வாக்கு படிவம் பெற்று சுதந்திரமாக வாக்கு செலுத்தலாம். 

அதன்படி படிவம் 12 டி-ல் விருப்ப விண்ணப்பம் அளித்துள்ள அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி தேர்தல் கடமையை நிறைவேற்ற வேண்டும். இந்த நிலையில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரும் 18ஆம் தேதி வரை வாக்களிக்கலாம் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

தேர்தல் அலுவலர்கள், ஆட்கள் குறைவு என்பதால் 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான வாக்கு அளிப்பது வெவ்வேறு நாட்களில் நடைபெறும் என்றும் இரண்டு முறை வாக்குகளை வாங்க தேர்தல் அலுவலர்கள் வீட்டிற்கு வருவார்கள் 85 வயதுடைய மூத்த குடிமக்கள் மாற்று திறனாளிகள் அதற்குள் தபால்  வாக்குகளை செலுத்த வேண்டும் இல்லையென்றால் வாக்குப்பதிவு நாளில் நேரில் வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow