மதுபான விடுதி இடிந்து விபத்து - உரிமையாளர் போலீசில் சரண்...
விடுதி இடிந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபான விடுதி இடிந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விடுதியின் உரிமையாளர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் சேக்மேட் (Sekhmet Club) என்ற தனியார் மதுபான விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த 28-ம் தேதி முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த சைக்ளோன் ராஜ், மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் மற்றும் லல்லி ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுபான விடுதிக்கு அருகே நடைபெற்று வந்த மெட்ரோ பணி காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு மெட்ரோ நிர்வாகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விடுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விபத்து ஏற்பட்ட மதுபான விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மதுபான விடுதி உரிமையாளர் அசோக் குமார் நேற்று (மார்ச் 30) சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஏற்கனவே மேலாளர் சதீஷ் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?