மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல செய்தி வருமா?... பொதுநல வழக்கில் மத்திய, மாநில பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
மாற்றுத்திறனாளிகள் அனைத்து சலுகைகளையும் பெற ஒரே அடையாள வழங்க கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகின்றன. இந்தநிலையில், அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கு வசதியாக ஒருங்கிணைந்த ஒரே அடையாள அட்டையை வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூரை சேர்ந்த சுவாமிமலை சுந்தர விமலநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் கூறியிருந்ததாவது, "நான் மாற்றுத்திறனாளி. என் போன்ற மாற்றுத்திறனாளிகள் ரயிலில் முன்பதிவு செய்தால், மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவ சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல டிக்கெட் பரிசோதனையின் போதும் அதனை காண்பிக்க வேண்டும்.
இதேபோல், தமிழக பேருந்துகளில் பயணம் செய்யும்போது மாற்றுத்திறனாளி ஆணையத்தால் வழங்கப்பட்ட பாஸ் புத்தகம், மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை காண்பிப்பதோடு அதன் இரு நகல்களையும் நடத்துனரிடம் வழங்க வேண்டும். இதனால், மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக பார்வை மாற்றத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே, மாற்று திறனாளிகளுக்கான தனிநபர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக நடவடிக்கை கோரிய நிலையில் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, மாற்று திறனாளிகளுக்கான தனிநபர் அடையாள அட்டை வழங்குவதோடு போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் இட ஒதுக்கீட்டை பெற அதையே அடையாள அட்டையாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் அருள் ஆனந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முறையாக வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய அரசின் ரயில்வே துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது என கூறினார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய அரசு, மாநில அரசு தனித்தனி அடையாள அட்டைகளை கையாளுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் உள்ளது. இவை அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே அடையாள அட்டையாக வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொதுநல வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.
What's Your Reaction?