’ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா!’- ஊஞ்சல் ஆசை தரும் உன்னதப் பாட்டு!
சிவாஜி கணேசன், உஷா நந்தினி நடித்த ‘பொன்னூஞ்சல்’ படத்தின் ‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ பாடல், கண்ணதாசனின் கவித்துவம், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை, டி.எம்.எஸ்.-சுசீலாவின் குரல் வழியே நினைவுகளையும் மன அமைதியையும் ஊஞ்சலாட்டும் ஓர் இனிய இசைப் பயணம்.
படம் அவுட்டு... பாட்டு ஹிட்டு! - வி.ராம்ஜி
நம்முடன் நம் குடும்பம் குடித்தனம் நடத்துகிறதோ இல்லையோ... ஆனால் சில பொருட்கள் நம்முடன் எப்போதுமே உறவாடிக்கொண்டே இருக்கும். வேலை நிமித்தமாக, மனைவி குழந்தைகளையும் வீடு வாசலையும் விட்டு, நாம் இந்த உலகில் எந்த மூலையில் அல்லது நடுவில் வாழ்ந்துவந்தாலும், அந்தப் பொருள் நம் மனப்பத்தாயத்தில் இருந்துகொண்டே இருக்கும். இவ்வளவுக்கும் அந்தப் பொருள் நம் வீட்டில் இதுவரை இல்லாததாகக் கூட இருக்கலாம். ‘இருக்குன்னு எங்கேங்க சொன்னேன்; இருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்’ என்று ஒரு வீட்டு ஹாலை, அழகாக்குகிற அந்தப் பொருள், நம் மனதில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டே இருக்கும். அது... வேறென்ன ஊஞ்சல்தான்!
ஊஞ்சல் என்பது மனசை லேசாக்கும் மந்திரப்பாய் என்று ஒன்பதாவது படிக்கும்போது எழுதிய கவிதையெல்லாம் (இது கவிதையா என்று தெரியவில்லை) நினைவுக்கு வருகிறது. ஊஞ்சல் எத்தனை வயதானாலும் சந்தோஷம்தான். இந்த சந்தோஷத்தின் இன்னொரு பெயர்தான் அமைதி. பால்யத்தில் சந்தோஷம். முதுமையில் அமைதி. இரண்டுக்குமான வலிநிவாரணி, ஊட்டச்சத்து எல்லாமே ஊஞ்சல்தான்!
சினிமாவில் ஊஞ்சலாடிக் கொண்டு யார் நடித்தாலும் நமக்கும் அந்த குதூகலப் பரவசங்கள் ஒட்டிக்கொள்ளும். கல்யாண வீடுகளில், ‘கெளரி கல்யாணம் வைபோகமே, சீதா கல்யாணம் வைபோகமே...’ என்று ஊஞ்சலில் அமரவைத்து, பாலும்பழமும் கொடுப்பார்கள். இதை கிட்ட நின்று, ஊஞ்சல் கம்பியைத் தடவிக்கொண்டே இருந்த சிறுவயது.. ‘இப்படி நமக்கும் மாலையெல்லாம் போட்டு பாடுவாங்களா? ஆமாம்... நம்ம பக்கத்துல யாரு உக்காந்திருப்பா? என்று ஸ்ரீதேவி, ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா என்று சட்சட்டென்று என் ‘கலைடாஸ்கோப்’பில் மாறுவது போல், மனதுள் மாற்றி மாற்றி அவர்களை உட்காரவைத்து ஆடியதெல்லாம் நினைத்தால், சிரிப்புச்சிரிப்பாய் வருகின்றன!
பாட்டு சுகம். ஊஞ்சலில் ஆடிக்கொண்டே கேட்பது இன்னும் சுகம். ஊஞ்சல் பாட்டு என்பது இன்னும் ஆனந்தம். படத்துக்கு ‘பொன்னூஞ்சல்’ என்று தலைப்பு வைத்த இயக்குநர் சிவி.ராஜேந்திரன், ஊஞ்சல் சம்பந்தமான பாட்டு வைக்காவிட்டால்தான் ஆச்சரியம். சிவாஜியும் உஷா நந்தினியும் நடித்த ‘பொன்னூஞ்சல்’ 1973ஆம் ஆண்டு வெளியானது. இந்த ‘பொன்னூஞ்சல்’ மனதில் ஆடிய அளவுக்கும் ஓடிய அளவுக்கும் சரிபாதியேனும் ஓடியிருக்கலாம். ஆனால், ஐம்பது அறுபது நாட்களைக் கடப்பதற்குள், தியேட்டர் ஆபரேட்டரும் ரசிகப்பெருமக்களும் அயர்ச்சியாகிவிட்டார்கள்.
ஆனால், கவிஞர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனும் ஒருபக்கம் கூட்டு சேர்ந்தார்கள். டி எம் செளந்தர்ராஜனும் சுசீலாம்மாவும் இன்னொரு பக்கம், ‘நாங்க இருக்கோம். கவலையே படாதீங்க’ என்று குரல் வழியே உறுதி தந்தார்கள்.’நான் மட்டும் என்ன சும்மா இருந்திருவேனா?’ என்று ’நால்வருடன் சேர்ந்து ஐவரானோம்’ என்று ராமாயணம் சொன்னது போல், சிவாஜியும் சேர்ந்துகொண்டார். படம் ஊசலாடினாலும் பாட்டு இன்னும் ஊஞ்சலாடிக்கொண்டே இருக்கிறது. அந்தப் பாட்டுதான் ‘ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’!
வீணை, ஷெனாய், புல்லாங்குழல் என்று மங்கலகரமாகக் கைகோர்த்துக்கொண்டு தொடங்குகிற ஆரம்ப இசையே அமர்க்களம் பண்ணிவிடும். நம்மை ஒரு ஆனந்த ஆட்டத்துக்குள் இறங்கி ஆடவும் பாடவும் வைத்துவிடும்.
ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஅ
ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஅ
முன்பே சொன்னது போல், ஊஞ்சல் தரும் பரவசம், கற்பனைக்குள்ளேயும் கனவுகளுக்குள்ளேயும் நம்மை ரவுண்டுகட்டி முன்னும்பின்னுமாக கைப்பிடித்து அழைத்துச் சென்றுவிடும். ‘ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா’ என்கிறார் கவிஞர். ‘போவோமா’ என்று கேட்டுவிட்டு, நாம் போவதற்குள் மனசு அங்கேபோய்விட்டது என்று விளக்குகிறார் கண்ணதாசன்.
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச் சங்கு கையேந்தி நாம் அங்கே போவோமா
மீனாளின் குங்குமத்தை
மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
பொதுவாகவே அமங்கலச் சொற்களைப் பயன்படுத்தவே மாட்டார் கவியரசர். மாறாக, மங்கலச் சொற்கள், மங்காத எண்ணங்கள், நேர்மறைச் சிந்தனைகள் என ஒவ்வொரு ஸ்பூன் கலந்து, நமக்குத் தருவதுதான் கவிஞர் ஸ்பெஷல். பூ, பட்டு, சங்கு, மீனாட்சி குங்குமம், மஞ்சள் என்று ஊஞ்சல் பாட்டுக்குள் கல்யாண வீட்டில் இருக்கும் பொருட்களையெல்லாம் சொல்லிவிடும் கவிஞரின் வரிகளில், அந்த சொக்கனே சொக்கிப்போகும்போது, நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?
பால் வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா
’உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. என்னை உனக்குப் பிடிச்சிருக்கு. ஓடிப்போயிடலாமா? யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாமா? கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா? பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?’ என்றெல்லாம் நாடும் நாட்டு மக்களும் முன்னேறிவிட்ட காலத்தில், தாய் தந்த சீர் என்று பால், பழம் என்றெல்லாம் டிஎம்எஸ் பட்டியலிடுவார். அதையடுத்து, ‘ஊராரின் சன்னதியில் ஒன்றாகவேண்டுமம்மா’ என்று கலாச்சாரம், சடங்கு எனச் சொல்லும்போது, அவரின் குரலில் கண்ணியமும் வெட்கமும் ஒருசேர வந்து உட்கார்ந்துகொள்ளும்.
கல்யாணம் நடந்தாச்சு, அடுத்து முதலிரவு என்கிற விஷயத்தை இங்கே கவிஞர் கண்ணதாசன், ‘ஸ்கிப்’ செய்வதன் சூட்சுமம்... ‘ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா’ என்பதற்குள்ளேயே பொதிந்துவிடுகிறது. இதையடுத்து கண்ணதாசனின் சொற்களுக்குள் நடக்கிற செப்படிவித்தைதான் என்னை இன்றைக்கும் வியக்கவைக்கிறது. தாய் தந்தை என்றுதானே சொல்லுவோம். ஆனால் கண்ணதாசன் தாய், சேய், தந்தை என்கிறார். கரு வளர்ந்து சிசுவாகி பெண்ணுக்குள் தாயெனும் உறவும் உணர்வும் பூக்கிறது. பத்துமாதம் கழித்து சேய் பிறக்கிறது.
பிரசவ வார்டு அறையின் வாசலில், இந்தப் பக்கமும் அந்தப்பக்கமுமாக கைபிசைந்து தவிக்கிற கணவனிடம் நர்ஸ், ‘உங்களுக்கு குழந்தை பிறந்திருக்குங்க’ என்று சொல்லும்போது அவனுக்குள் தந்தையாகிவிட்ட உணர்வு மேலெழும்புகிறது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு, ‘தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா’ என்று கருத்தாய்ச் சொன்னதால்தான் கவிஞர் கண்ணதாசனை காலக்கவிஞன் என்று இன்றைக்கும் கொண்டாடுகிறோம்.
ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஅ
என் தொடக்கக்காலங்களில் இந்தப் பாடலை ரேடியோவில்தான் அடிக்கடி கேட்டேன். எங்கள் வீட்டுக்கு எதிர்வரிசை தெருவில் சரோஜினி அத்தை வீடு இருந்தது. அங்கே விஜி அக்காவுக்கு என் அக்காவின் வயது. இவரின் தம்பிக்கு என்னை விட மூன்று வயது குறைவு. இவர்கள் வீட்டுக்கு ஒருநாளைக்கு ஆறேழு முறை போய்விடுவேன். அதற்கு பல காரணங்கள் உண்டு. ‘வாடா மருமவனே’ என்றுதான் சரோஜினி அத்தை என்னை அழைப்பாள். என்னை இப்படிக் கூப்பிட்ட முதல் ஆள் இவர்தான். அதேபோல், ஒருநாளைக்கு எத்தனைமுறை சென்றாலும் சரோஜினி அத்தையும் விஜி அக்காவும் எனக்கு கைநிறைய்ய தின்பண்டங்கள் கொடுத்துவிடுவார்கள். அடுத்து ‘உன் வேலையப் பாரு.
நீ வரலியே வரலியேன்னுதான் இம்மாம்நேரமும் அழுதுக்கிட்டே இருந்துச்சு’ என்று என் கன்னம் கிள்ளுவாள் விஜி அக்கா. உடனே நான் வெட்கிக் கோணி, அப்படியே அழகாக வருடிக்கொடுத்து, அந்த மர ஊஞ்சலில் உட்கார்ந்துகொள்வேன். நான் ஊஞ்சலாடும்போது சரோஜினி அத்தையோ அய்யாச்சாமி மாமாவோ தூங்குவார்கள். அவர்களின் தூக்கமும் கெடக்கூடாது; நானும் கூச்சமோ குழப்பமோ இல்லாமல் ஊஞ்சலாடவேண்டும். ஆகவே, நாலுபக்க சங்கிலிக்கும் வளையத்துக்கும் தேங்காய் எண்ணெய் ஊற்றிவைத்திருப்பாள்.
பிறகு என் இருபது வயது தாண்டிய பொழுதுகளில் பட்டிமன்றத்தில் என்னுடன் வாதிடும் தோழியின் வீட்டு ஊஞ்சலுடன் எனக்கு உறவு ஏற்பட்டது. சுஜாதாவின் ‘ஊஞ்சல்’ கதை படித்துவிட்டு, கதையின் கனம் தாங்கமுடியாமல், ஊஞ்சலில் இளைப்பாறியிருக்கிறேன். இதையடுத்து சொந்தமாக வீடு கட்டியதும் என்னை அப்பா ஸ்தானத்தில் இன்றைக்கும் வைத்திருக்கிற அப்பாஜி, மர ஊஞ்சலுக்கான செலவை ஏற்றுக்கொண்டான்.
கிரகப்பிரவேசத்தை என் குருநாதர் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் சார்தான் நடத்திவைத்தார். ‘ஹால்ல போடுறதுக்கு சோபா வாங்கிடலாமா’ என்று கேட்டார். ‘சோபா போடமுடியாது சார்’ என்றேன்.’ஏண்டா இடம் சின்னுதா?’ என்றார். ‘மர ஊஞ்சல் மேல ஆசை சார். மூணுபேர் உக்கார்ந்து ஆடுற மாதிரி ஊஞ்சல் சார்’ என்றேன். கண்கள் மூடி சிறிதுநேரம் யோசித்தவர், ‘டேய் ராம்ஜி, எனக்கு ஊஞ்சல்னா சின்ன பயம்டா’ என்றார் குழந்தையைப்போல்!
பிறகு வீட்டுக்கு வந்த பாலகுமாரன் சார், ஊஞ்சலில் அமர்ந்தார்.’யாரும் ஆட்டிடாதீங்கப்பா’ என்றார். சங்கிலியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். மெல்ல கால்களால் உந்தினார். ‘ராம்ஜி, வாடா உக்காந்துக்கோ’ என்று சத்தமாக அழைக்கும்போது, பயம் போயிருந்தது. சங்கிலியில் இருந்து கையை எடுத்து என்னை சைகை காட்டி அழைத்தபோது, என் குருநாதர் எங்கள் வீட்டின் ‘பால’குமாரனாகவே ஆகிப்போனார்.’ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ என்று பாடிச் சென்றார்.
என் வயதுக்காரர்கள் பெரும்பாலும் ஊஞ்சாலாடும்போது இந்தப் பாடலைப் பாடாமல் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். அதேபோல், ‘டொங்டொங்டொங்டொங்... டொடடொடடொடடொடய்ங்க்’ என்று மெல்லிசை மன்னரின் இசையை, வரிகளுடன் சேர்ந்து வாயால் இசைத்துப் பாடிக் குதூகலிப்பது இப்போதும் செய்வதுண்டு.
ஊஞ்சல் என்றால் ஆனந்தம். ஆனந்தம் எது தருகிறதோ அது அமைதியையும் தரும். அமைதியும் ஆனந்தமுமாக ‘ஊஞ்சல்மனசு’ என்னை நிதானத்திலேயே இருக்கவைக்கிறது.
‘பொன்னூஞ்சல்’ படத்தின் ‘ஆகாயப்பந்தலிலே...’ பாடலைக் கேட்டுப்பாருங்கள். உங்களின் ஒருகையை டிஎம்எஸ்ஸும் இன்னொரு கையை சுசீலாம்மாவும் பிடித்து, ஊஞ்சலில் ஏற்றிவிடுவார்கள். மெல்லிசை மன்னரும் கவியரசரும் அப்படியே ஊஞ்சலாட்டியபடி அமைதிப்படுத்துவார்கள்!
இப்போது சொந்த வீடு இல்லை. ஊஞ்சலை அறுபதாம் கல்யாணம் கொண்டாடிய தம்பதிக்குக் கொடுத்துவிட்டேன். ஆனால், யாராலும் பிரிக்கமுடியாமல், ‘ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ என்ற பாடலும் இசையும் குரலும் நடிப்பும் மனசைக் குதூகலப்படுத்திக்கொண்டே இருக்கிறது!
What's Your Reaction?

