தங்கச் செயின், புதிய வாழ்க்கை... கணேசன்–வனஜாவின் இனிய தொடக்கம்!

திருமணத்தின் முதல் இரவில் மனைவி வனஜாவை அன்புப் பரிசால் மகிழ்விக்க நினைக்கும் கணேசனின் உற்சாகம், பதற்றம் மற்றும் புதுமணத் தம்பதிகளின் இனிய உரையாடல்களுடன் புதிய வாழ்க்கையின் முதல் நாள் எப்படி தொடங்குகிறது என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லும் கதை.

Jul 26, 2026 - 18:00
Jul 25, 2026 - 12:54
தங்கச் செயின், புதிய வாழ்க்கை... கணேசன்–வனஜாவின் இனிய தொடக்கம்!
malaimathi

கல்யாணம் ஆகிவிட்டது. நினைத்தாலே ஆச்சர்யம். தனக்கா என்பது போல்! இன்னும் சில நிமிடங்களில் வனஜா உள்ளே வந்து விடுவாள். புதுப் பட்டுப் புடவையில் பால் சொம்புடன். கணேசன் மனமெல்லாம் என்னவோ செய்தது. சட்டைப்பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். கனத்தது. முதல் பரிசு. அன்புப் பரிசு. வனஜா அதைப் பிரித்துப் பார்த்ததும் திகைக்கப் போகிறாள்.

மணிதான் இந்த ஐடியா எல்லாம் கொடுத்தது. 'கல்யாணமான கொஞ்ச நாளைக்கு உன் பொண்டாட்டிய நல்லாக் கவனிச்சிரு. அதுக்கின்னே பைசா சேர்த்துக்க. பணத்தைப் பணமா பார்க்காதே. சும்மா ஆளை அப்படியே அசத்திரணும். அப்புறம் பாரு. உனக்குத் தனி கவனிப்பே கிடைக்கும். இருந்தாலும் கணேசனுக்கு சந்தேகம்தான். கூடவே சின்னதாய் ஒரு பயமும். கேட்டே விட்டான் மனசுக்குள் வைத்துக் கொள்ளாமல்.

'அதே போல எப்பவும் செலவு செய்வேன்னு நினைச்சுட்டா..?
'அதுதான் இல்லே. ஆரம்பத்துலேயே நீ ஒரு கஞ்சப் பையன்னு அவ நினைச்சுரக் கூடாது. அவ சந்தோஷம்தான் முக்கியம்னு நினைக்கிற மாதிரி செய்யணும். ஆட்டோ வைக்கணும். புது சினிமா, ஹோட்டல்ல சாப்பாடு, லைஃபை அப்படியே சுத்தமா அனுபவிச்சுரணும். அதெல்லாம் விட இன்னொரு முக்கியமான விஷயம்...
'என்னது..?' கணேசனுக்குத் தவிப்பு கூடியது.

இவன் என்ன வளர்த்திக் கொண்டே போகிறான்! "பார்க்கிற முதல் நாளே, உன் முதலிரவு அன்னிக்கே அவ அசர்ற மாதிரி ஒரு பிரசென்ட் பண்ணிரு. அப்புறம் பாரு' என்றான் மணி. விட்டால் ஒரு புத்தகமே போடுவான் போல இருந்தது. புது மணத் தம்பதிகளுக்கு டிப்ஸ்! எத்தனை யோசனைகள்! கணேசன் இதுதான் உலகிலேயே முதல் கல்யாணம் போல உணர்ந்தான். எனக்கென்று ஒருத்தி. பிரத்தியேகமாய். தனி வாசனையாய். புது வடிவாய்.

வனஜாவைப் பெண் பார்த்த மறு விநாடியிலேயே அவளைப் பிடித்து விட்டது. நீண்ட தலை முடி. புஷ்டியான உடல் வாகு. மாநிறம். அந்த நிமிடமே மானசீகமாய் ஆவலுடன் பேச ஆரம்பித்து விட்டான். வார்த்தைகள் தங்கு தடையின்றிப் பிரவகித்தன. கொஞ்சம் பொறுத்தால் கவிதையே எழுதுவான் போல உணர்ந்தான். திருமணத்திற்குக் காத்திருந்த இரண்டு மாதங்களும் போரடித்தது. ஒரு நாள் அவள் வீட்டருகே போய் அதற்கு மேல் செயல்படத் துணிச்சலின்றித் திரும்பினான். நேற்று திருமண மண்டபத்தில் நுழைந்ததும் இதே கட்டடத்தில் இன்னொரு மூலையில் அவள் என்று உருகினான். மண மேடையில் இருவரையும் சேர்த்து அமர்த்தியதும் ஜிலீரென்றது. ரகசியமாய்த் திரும்பி அவள் முகம் பார்த்து லேசாக உரசி... இவ்வளவு தவிப்பும் இதோ முற்றுப் பெறுகிற தருணம் வந்துவிட்டது.

'ஏன் இன்னும் வனஜாவைக் காணவில்லை..?" இதயத் துடிப்பின் ஒலி வேலையில் கேட்கும் பிரமை. மணி மீண்டும் மனதில் எதிரொலித்தான். 'நண்பா. ஒரு விஷயம் மறந்துராதே. உன்னுடைய முதல் தொடுகை மிக இயல்பாய் நிகழணும். பாயாதே. வேணாம். பெண் பூ மாதிரி! மந்திரம் மாதிரி வார்த்தைகளை உச்சரித்தான். 'முத நாளே வேணாங்கிறியா?' கணேசனுக்கு உள்ளுக்குள் பக்கென்றது. மணி உரக்கச் சிரித்தான். நண்பன் மனதில்தான் எவ்வளவு ஆசைகள்!

'அப்படிச் சொல்லல. ஆனா, அதுக்காகத்தான் காத்துட்டிருந்த மாதிரி எதுவும் அதிரடியா செஞ்சிராதே. நல்லா இருக்காது!' படித்த கேள்விகள்தான் வந்திருக்கிறதா என்பது போலத் தூரத்தில் விநியோகம் ஆகும் கேள்வித்தாளைப் பார்க்கும் மாணவனாய்ப் படபடப்புடன் கணேசன் தவித்தபோது, கதவு அருகே சத்தம் கேட்டது.
வனஜாவை பால் சொம்புடன் உள்ளே அனுப்பி, யாரோ சிரிப்புடன் கதவை மூடுவது புரிந்தது. அவனையும் மீறி, படக்கென்று எழுந்து நின்றான்.

"வா” என்றான் முனகலாய், தன் படபடப்பைச் சமாளித்துக் கொண்டு. அப்படியே நின்றவளை மெல்ல அணுகிக் கையைப் பிடித்தான். அந்த ஸ்பரிசம் அப்போது வேண்டியிருந்தது. "வாயேன், உட்காரலாம்" என்றான் வேண்டுகோள்போல! கனமில்லாதவள் போல அப்படியே மிதந்து வந்தாள். இரு கைகளையும் பிடித்து அமர வைத்து, எதிரில் நின்றான். ஷர்ட் பாக்கெட்டில் கை விட்டு, ரோஸ் சலஃபன் பேப்பரில் சுருட்டிய பொட்டலத்தை வெளியே எடுத்தான்.
"என்னோட அன்புப் பரிசு!” முகமெல்லாம் ஜொலிக்க, பவ்யமாய் அணிவித்தான்.

தங்கம் பளிச்சிட்டது. புதுக் கருக்கில் மினுமினுவென்று செயின். கழுத்தில் மாட்டியதை உடனே கழற்றி, ஆசையாய் உற்றுப் பார்த்தாள். "துபாய்ல வாங்கினது. மெஷின் கட்டிங்!” என்றான் வேகமாய். "நல்லா இருக்கு” என்றாள் முதல் வார்த்தைகளாக. கண்களில் ஜொலிப்பு!
"கழுத்துல போட்டுக்க” என்றான், பாதி கெஞ்சலாக. போட்டதும் உடனே கழற்றியதில் சுருக்கென்றது. ஆனாலும், தன் மேல்தான் தவறு. புது செயினை அவள் கையில் கொடுத்திருக்க வேண்டும்.

பார்த்து ரசித்ததும் கழுத்தில் போடச் சொல்லி அவளே சொல்லியிருப்பாள் என்று சமாதானம் சொல்லிக் கொண்டான். பக்கத்தில் அமர்ந்துவிட்டான். வனஜா புதுச் செயினை அணிந்துகொண்டாள். மேலே சுழன்ற மின்விசிறியை விமர்சிப்பது போலப் பார்த்தாள். ஏசி அறையில் ஏன் என்கிற மாதிரி. ஜன்னல் கதவுகள் மூடியிருந்தன. "புழுக்கமா இருக்குல்ல" என்றான், ஏதோ சொல்ல நினைத்ததுபோல. அவளிடம் என்ன பேசுவது, எப்படி அணுகுவது என்றே அவனுக்குப் புரியவில்லை. அவள் வேறு உலகம் போல. மொழி புரியாத பிரஜை போல. அவளின் அனுமதிக்கு எதிர் நோக்கி இதயத் துடிப்புகள் அதிகமாகிக் காத்திருந்தான்.
திடீரென அவனைப் பார்த்துச் சிரித்தாள். அந்த அறையே தனிப் பிரகாசமானது. “என்னைப் பிடிக்குதா?” என்றான் அவனையும் மீறி. இந்தக் கேள்வி மட்டும் வேண்டாம் என்று முன்பே தீர்மானித்து இருந்ததை அவனே மீறி விட்டான். கேட்டுவிட்டு உதட்டைக் கடித்துக் கொண்டான்.
மறுபடியும் அழகாய்ச் சிரித்தாள்.

"உங்களுக்கு என்ன வேலை?” என்றாள் சம்பந்தமே இல்லாமல்.
"ஏன் உங்க வீட்டுல சொல்லலியா?” என்றான் சற்றே அலுப்புடன்.
"நீங்கதான் சொல்லுங்களேன்” என்றாள் விடாமல்.
"ஒரு பெரிய தொழிற்சாலையில் வேலை. பிஃப்டி கே பேசிக் என்றான் பெருமையாய்.
"அவ்வளவுதானா?" என்றாள் அலுப்பாய்.
"அது பேசிக் மட்டும்” என்றான் அவசரமாய்.
"புரியுது. அப்புறம்..?" தெரிந்தவள் போலத் தலையாட்டினாள்.
"ஓவர் டைம் உண்டு. டபுள் காசு!" என்றான் இன்னும் கூடுதல் உற்சாகமாய்.
"வேற வீடு பார்க்கணும்” என்றாள் மறுபடியும் தொடர்பில்லாமல்.
"பார்த்து வச்சிருக்கேனே. நல்ல எடம். எப்பவும் தண்ணி வரும்."
"எனக்குத் துணி தோய்ச்சா கை நோவும்!" கைகளைப் பிசைந்து கொண்டாள்.

"பரவாயில்ல. வேலைக்கு ஆள் வச்சிரலாம்" என்றான் அவள் கையை லேசாய்த் தொட்டு.
"பாத்திரம் துலக்க, துணி தோய்க்க, வீடு பெருக்க எல்லாத்துக்குமா..?” வனஜா ஆசையாய்க் கேட்டாள்.

"சென்ட் எல்லாம் போட மாட்டிங்களா?” என்றாள் மூச்சை இழுத்து.
"எது நல்லா இருக்கும்னு தெரியலையே!” என்றான் அப்பாவித்தனமாய்.
"நான் சொல்றேன். இனிமே நான் சொல்ற மாதிரிதான் நீங்க ட்ரெஸ் செய்யணும்.”
“சரி” பூம் பூம் மாடு போலத் தலையாட்டினான்.
பேச்சு இதே ரீதியில் இரவு முழுக்க நீடிக்குமா என்ற தவிப்பு அவனுக்கு வந்துவிட்டது. அது அவன் கண்களில் பிரதிபலித்துவிட்டது.
"தினசரி நீங்க தூங்க நேரம் ஆவுமா?" என்றாள் கைகளிரண்டையும் உயர்த்தி, பொய்யாய் அசதி வெளிப்படுத்தி.

ஹப்பா! இதுதான் க்ரீன் சிக்னலோ?! கணேசனுக்கு முகம் பிரகாசமானது. அந்த அறை மறு விநாடி இருண்டு போனது.
கணேசன் தன் வசமிழந்தான். வனஜா ஏதோ பல வருஷ அறிமுகம்போல சுலபமாய் அவன் மனதில் பிரவேசித்து, இருக்கை போட்டுக் கொண்டாள். கணேசன் இதுவரை அறியாப் புது உலகத்திற்குள் ஜோடியாய்ப் பிரவேசித்தான்.
இரவு சட்டென்று முடிந்து, சூரியன் மிக சீக்கிரத்தில் ட்யூட்டிக்கு வந்துவிட்டான். காலை வெளிச்சத்தில் பக்கத்தில் படுத்திருந்தவளைப் பார்த்தபோது நேற்றைய பிரமிப்பு லேசாக ஆட்டம் கண்டிருந்தது. ஆனாலும், புது அனுபவம் ஏதோ ஒரு கவர்ச்சியையும் தூவியது.
"வனஜ்... ஏய்” என்றான் மெலிதாய் உலுக்கி.
“என்ன” என்றாள் குரலில் சோம்பல் விலகாமல்.

"எழுந்திருக்கலியா, மணி ஏழரை!”
"இன்னிக்கு ஆபிசா உங்களுக்கு?” அவள் வார்த்தையில் உஷ்ணம் தெரிந்தது.
"இல்லியே” என்றான் குழப்பமாக.
"அப்புறம் என்ன, பேசாமப் படுங்க. எனக்கு இன்னும் தூக்கம் வருது."
அவன் பதிலுக்குக் காத்திராமல் திரும்பப் படுத்துத் தூங்கிப் போனாள்.

சரிதானே! உடனே எழுந்து என்ன செய்வது? மணி வீட்டுக்குப் போகலாம். அதற்கென்ன இப்போது அவசரம். ஏதாவது கோவில், ஹோட்டல், சினிமா. படுத்தால் தூக்கம் வரவில்லை. பக்கத்தில் திரும்பி அவள் மேல் உரசினான்.

அசைவில்லை. எவ்வித எதிர்வினையும் இன்றி அப்படியே படுத்திருந்தாள். கணேசனுக்கு என்ன செய்வது என்று முதலில் புரிபடவில்லை. இதுவரை அவனுடைய தினசரி அட்டவணைகள் வேறு மாதிரி இருந்தன. இன்று குழப்பம் மட்டுமே மிஞ்சியிருந்தது. தூக்கம் இல்லாமல் புரள்வதோ படுத்திருப்பதோ அவன் இயல்புக்கு மாறானது. சரி, அவள் தூங்கட்டும், தனக்கென்ன வந்தது என்று தோன்றியது.
வனஜா எழுந்தபோது மணி ஒன்பதரை. கணேசன் அதற்கு முன்பே எழுந்து பால் காய்ச்சி காபி போட்டிருந்தான். வனஜா கலைந்த தலை முடியுடன் அவனைப் பார்த்து வசீகரமாய்ச் சிரித்தாள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow