முழுவதும் அழிந்த காசா!! அடுத்ததாக ரஃபா மீது குறிவைக்கும் இஸ்ரேல்...அச்சத்தில் பாலஸ்தீனர்கள்...
காசாவை தொடர்ந்து தற்போது ரஃபா மீது போர் தொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் பொருட்டு இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. 2023-ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய காசா-இஸ்ரேல் இடையேயான போரானது தொடர்ந்து நடந்து வருகிறது. காசா மீது வான்வழி, தரைவழி என அனைத்து வழிகளிலும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதன் மூலம் இருதரப்பிலும் கிட்டத்தட்ட 30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இஸ்ரேல் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கனுக்கு அரபு நாட்டு தலைவர்கள் அழுத்தம் கொடுத்திருந்தாலும் கூட, இஸ்ரேல் தனது முடிவிலிருந்து பின் வாங்குவதாக இல்லை. குறிப்பாக காசாவின் வடக்கு பகுதியை முற்றிலும் இஸ்ரேல் அழித்து விட்ட நிலையில், அங்கிருந்த மக்கள் பெரும்பாலானோர் தெற்குப் பகுதியான ரஃபா, கான்யூனிஸ் போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனை பொறுத்துக் கொள்ளாத இஸ்ரேல், கான்யூனிஸ் மீதும் தாக்குதல் நடத்தியது. அதேபோல் ரஃபாவிலும் தனது தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியா நிலையில், இன்று (மார்ச்-19) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 பாலஸ்தீனர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. எகிப்து எல்லைக்கு அருகே இருக்கும் ரஃபாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீன அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எகிப்து-காசா எல்லை மூடப்படும் அபாயமும், மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க முடியாத நிலையும் ஏற்படும் என்பதால் ரஃபாவில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
What's Your Reaction?