நிதி இல்ல! நீங்க Normal ஆ வே நடந்து வாங்க... பாகிஸ்தானில் நூதன தடை!

நிதி நெருக்கடி காரணமாக பாகிஸ்தானில் அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்வுக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். 

Apr 2, 2024 - 05:54
நிதி இல்ல! நீங்க Normal ஆ வே நடந்து வாங்க... பாகிஸ்தானில் நூதன தடை!

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் அண்மையில் தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றமானது நடந்தேறியது. அதன்படி இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.  இந்த நிலையில் அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளை தடுக்கும் நடவடிக்கைகளை பிரதமர் தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் பாகிஸ்தானில் மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது முக்கிய சம்பிரதாய நடவடிக்கையாக உள்ளது.  இந்த நடவடிக்கை பிரதமருக்கு அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதால் அவற்றை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை விதிக்க அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

பிரதமர், மாகாண முதல்வர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் அளிக்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்புக்கு தடை விதிக்க, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், அரசு முறை பயணமாக பாகிஸ்தானுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு அளிக்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற செலவினங்களை குறைத்து, அதில் கிடைக்கும் நிதியை அரசின் முக்கிய நிர்வாக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் முயற்சியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிக்கனத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் தாமாக முன்வந்து தங்களது சம்பளம் மற்றும் சலுகைகளை கைவிட கடந்த வாரம் முடிவெடுத்தனர். சிக்கன நடவடிக்கைகளே அரசின் முதன்மையான முன்னுரிமை நடவடிக்கை என்று ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow