மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் பாஜகவில் இணைப்பு?
பாஜகவில் சேர உள்ள அசோக் சவானுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவின் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். இவர் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் சங்கர் ராவ் சவானின் மகன் ஆவார். அசோக் சவான் மகாராஷ்டிரா அமைச்சராகவும், இரண்டு முறை முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த இவர், நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். சமீபகாலமாக காங்கிரஸ் தலைமையுடனான தொடர்பின்மை மற்றும் மாநில நிர்வாகிகளுடன் மோதல் போக்கே இதற்குக்காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலிக்கு அசோக் சவான் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, அசோக் சவான் இன்று டெல்லியில் பாஜக முக்கியத் தலைவர்களை சந்தித்து பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் இவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைவார்கள் என கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் காங்கிரஸில் அசோக் சவானின் விலகல் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாஜகவில் சேர உள்ள அசோக் சவானுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?