மறுமணம் செய்து தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை அனுப்பி மிரட்டியவர் கைது

பெண்ணின் உறவினர்களின் புகாரையடுத்து புதுக்கோட்டையைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Feb 13, 2024 - 09:57
Feb 13, 2024 - 10:45
மறுமணம் செய்து தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை அனுப்பி மிரட்டியவர் கைது

தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணின் அந்தரங்க படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், தனது கணவரை பிரிந்து கடந்த 27 ஆண்டுகளாக தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். மகன்களின் திருமணத்திற்கு பிறகு தனிமையை உணர்ந்த அவர், தன்னுடைய இரண்டு மகன்களின் ஒப்புதலுடன் மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.

அதன்மூலம் புதுக்கோட்டையைச் சேர்ந்த தனசேகரன் (57) என்பவரை மறுமணம் செய்தார். பின்னர் புதுக்கோட்டைக்குச் சென்று அவருடன் கடந்த ஒரு ஆண்டாக சேர்ந்து வாழ்ந்தார். அப்போது தனசேகரன் முன்னாள் மனைவி மற்றும் பல பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் அவரை பிரிந்து புதுச்சேரிக்கு திரும்பிய நிலையில், ஆத்திரமடைந்த தனசேகரன், இருவரும் தனிமையில் இருந்தபோது எடுத்த அந்தரங்க படங்களை அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் மகன்களுக்கு அனுப்பி மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அப்பெண்ணின் உறவினர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவின்பேரில், தனிப்படையினர் புதுக்கோட்டை சென்று தனசேகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow