விமானம் ரத்தால் தப்பித்த 376 பேர்- திடீர் இயந்திர கோளாறால் பயணிகள் அவதி
சென்னையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் 362 பயணிகள் நேற்று இரவு 10:30 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்பட தயாராகினர். விமானம் ஓடுபாதையில் ஓட தயாரானது. அதற்கு முன்னதாக விமானி, விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்த நிலையில் இயந்திர கோளாறு ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த நிலையில் விமானத்தை இயக்கினால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அவசரமாக தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு,விமான பொறியாளர்கள், விமானத்துக்குள் ஏறி,விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்தனர். அதோடு விமானம் காலதாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நள்ளிரவை கடந்தும் விமானத்தின் இயந்திரங்கள் சரி செய்ய முடியாததால் ரத்து என அறிவிக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். ரத்தான விமானம் நள்ளிரவு அல்லது காலை மீண்டும் துபாய்க்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை சரியான நேரத்தில் விமானி கண்டுபிடித்ததால் 362 பயணிகள் 14 விமான ஊழியர்கள் உட்பட, 376 பேர் நல் வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது.
What's Your Reaction?