பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா. இவர் வயது மூப்பு காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். குணம் அடைந்து வீடு திரும்பிய அவர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில் இன்று மதியம் அவர் (நவ.,24) காலமானார். தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
'ஆயி மிலன் கி பேலா', 'பூல் அவுர் பத்தர்', 'ஆயே தின் பஹார் கே', 'சீதா அவுர் கீதா', 'ராஜா ஜானி', 'ஜுக்னு', 'யாதோன் கி பாராத்', 'தோஸ்த்', 'ஷோலே', 'பிரதிக்ஞா', 'சரஸ்', 'தரம் வீர்' போன்ற பல படங்களில் சிறப்பாக நடித்தவர் தர்மேந்திரா. கடைசியாக 2023ல், கரண் ஜோஹர் இயக்கிய 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் அவர் நடித்து இருந்தார்.
நடிகர் தர்மேந்திரா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் இறந்து விட்டதாக செய்தி வெளியாகின. ஆனால் சிறிது நேரத்திலேயே, அவர் உயிருடன் இருப்பதாகவும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் தெரிவித்தார்.
அதேபோன்று நடிகை ஹேமாமாலினியும் தனது கணவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகின்றன என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று வீட்டு சிகிச்சையில் இருந்த அவர் காலமானார். அவரது மறைவு செய்தி பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?

