குழந்தைகள் கடத்தப்படுவது போல் வெளியான வீடியோக்கள் - காவல்துறையினரின் விளக்கம் என்ன?

சென்னையில் வடமாநில இளைஞர்கள் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களை மக்கள் நம்ப வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Feb 17, 2024 - 17:35
குழந்தைகள் கடத்தப்படுவது போல் வெளியான வீடியோக்கள் - காவல்துறையினரின் விளக்கம் என்ன?

சமூக வலைதளங்களில் பள்ளி குரூப் ஒன்றில் செல்வி என்ற பெண் பதிவிட்ட ஒரு ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.  அந்த ஆடியோவில் கடந்த 12ஆம் தேதி தனது மகள்கள் சாத்தாங்காடு ஜோதி நகர் வழியாக ஹிந்தி வகுப்புக்கு சென்ற போது, காரில் வந்த வடமாநில நபர்கள் சிலர் பானிபூரி வாங்கி தருவதாக கூறி அழைத்ததாகவும், பெற்றோர் உஷாராக இருக்கும்படியும் பேசி வெளியிட்டு இருந்தார். 

இந்த ஆடியோ சமூக வலைதளங்கள் மூலமாக வேகமாக பரவிய நிலையில், எண்ணூர், திருவொற்றியூர், சாத்தாங்காடு, மணலி, ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வடமாநில தொழிலாளர்களை கண்டாலே பொதுமக்கள் சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கினர். திருவொற்றியூர் மற்றும் சாத்தாங்காடு ஆகிய பகுதியில் சுற்றி திரிந்த வடமாநில தொழிலாளர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் பிடித்து அடித்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வடமாநில நபர் ஒருவர் முடி வைத்துக்கொண்டு வீடுகளை நோட்டமிட்டு குழந்தைகளை கடத்தி செல்வதும், குழந்தைகள் அவரை பார்த்து ஓடுவதும் போன்ற சிசிடிவி காட்சிகளும் பரவியது. 

இது குறித்து சென்னை, ஆவடி காவல் ஆணையருக்கு தகவல் சென்ற நிலையில், அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆடியோவை வைத்து விசாரணை தொடங்கினர். விசாரணையில் அது போன்ற எந்தவிதமான சம்பவமும் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் நான்கு வருடங்களுக்கு முன்னதாக வடமாநிலத்தில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை தற்போது சமூக வலைதளங்களில் மர்ம நபர்கள் சிலர் பரப்பியதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் இது போன்று பொய்யான வீடியோக்களை பரப்பி, மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் வலம் வருவதாகவும், இந்த போலியான வீடியோக்களை கண்டு பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். உதவி தேவைப்பட்டால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் எனவும் இது போன்ற பொய்யான வீடியோக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow