ஓடும் ரயில் நகை, பணம் வழிப்பறி.. அரக்கோணத்தில் அதிர்ச்சி.. வெள்ளி பொருட்களை மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீஸ்  

அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் புதுமண தம்பதியர் இடமிருந்து 20 சவரன் நகை,  10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Apr 27, 2024 - 12:46
ஓடும் ரயில் நகை, பணம் வழிப்பறி.. அரக்கோணத்தில் அதிர்ச்சி.. வெள்ளி பொருட்களை மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீஸ்  

திருவள்ளூர் மாவட்டம் கணபதி நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கு கடந்த 21ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. 

திருமணம் முடிந்து மனைவி மற்றும் குடும்பத்தினருடன் காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில், காச்சிகுடாவிலிருந்து அரக்கோணம் வரை பி-5 என்ற முன்பதிவு பெட்டியில் வந்து கொண்டிருந்தார் . 

இந்த நிலையில் காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் அருகில் வரும்போது அவர்கள் வைத்திருந்த நகைப்பெட்டி அடங்கிய பை மாயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மணிவண்ணன் அரக்கோணம் ரயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்தார்.  

அதில் காணாமல் போன பையில் தங்க வளையல்கள், நெக்லஸ், ஜிமிக்கி கம்மல் என மொத்தம் 20 சவரன் தங்க நகைகளும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை இருந்ததாகவும், திருடு போன நகை மற்றும் பணத்தை ரயில்வே போலீசார் கண்டுபிடித்து தருமாறு மணிவண்ணன் தெரிவித்திருந்தார்.  இதையடுத்து புகாரின் பேரில் அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஓடும் ரயிலில் புதுமண தம்பதியரிடமிருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அகஸ்தியாபுரம் அடுத்த மார்த்தாண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொன்ராஜ், 58 கன்னியாகுமரியில் இருந்து காசி செல்லும் காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடலூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து தனது  மகளை மருவீட்டுக்கு புதுச்சேரிக்கு அழைத்து சென்றார்.

அப்போது அவர் மகளுக்கு மருவீட்டு சீதனமாக தருவதற்காக வெள்ளி குத்துவிளக்கு, டம்ளர் உள்ளிட்ட அரை கிலோ வெள்ளி பொருட்களை தங்களுடன் எடுத்து வந்தார். ரயிலில் இருந்து இறங்கும்போது  ஒரு பையை ரயிலிலேயே தவறவிட்டது தெரிய வந்தது.

இது குறித்து கடலூர் ரயில்வே போலீசில் பொன்ராஜ் தகவல் தெரிவித்தார்.  அதன் பின்னர் செங்கல்பட்டு, அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொன்ராஜ் பயணம் செய்த ரயில் அரக்கோணம் வந்த போது, எஸ்-1 பெட்டியில் அவர், குறிப்பிட்டிருந்தது போன்று ஒரு பை இருந்தது . அதில் வெள்ளி பொருட்களும் வைக்கப்பட்டிருந்தது.  அந்த பையை அரக்கோணம் ரயில்வே போலீசார் மீட்டு பொன்ராஜ்க்கு தகவல் தெரிவித்தனர். அவர் அரக்கோணத்திற்கு வந்து போலீசாரிடமிருந்து அரை கிலோ வெள்ளி பொருட்களை பெற்று சென்றார். அவர் அரக்கோணம் ரயில் போலீசாருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துவிட்டு சென்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow