மருத்துவம் பார்த்த போலி டாக்டர்… பலியான இளைஞர் உயிர்..!

கோவையில் வயிற்று வலிக்காக அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்த நிலையில், சட்டவிரோதமாக நடத்திவரப்பட்ட கிளினிக்கில் மருத்துவம் பார்த்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Sep 22, 2024 - 16:47
Sep 22, 2024 - 17:07
மருத்துவம் பார்த்த போலி டாக்டர்… பலியான இளைஞர் உயிர்..!

கோவை சூலூர் அடுத்த செஞ்சேரி மலை பகுதியைச் சேர்ந்த பிரபு ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வார காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரபு செஞ்சேரிமலை பகுதியில் உள்ள தாஸ் என்ற மருந்தகத்தின் அருகில் உள்ள கிளினிக்கில் ஊசி போட்டுள்ளார். வீடு திரும்பிய நிலையில் பிரபுவிற்கு வயிற்று வலி அதிகமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து கழிவறைக்கு சென்ற அவர், நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது தாயார் ரங்கம்மாள் கழிவறைக்கு சென்று பார்த்தபோது பிரபு மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். 

இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரபுவை அவரது பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.  அங்கு பிரபுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக சுல்தான்பேட்டை காவல் நிலையத்துக்கு பிரபுவின் உறவினர்கள் தகவல் அளித்த நிலையில், பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக இளைஞர் உயிரிழந்ததாக கூறி பிரபுவின் உறவினர்கள் இஎஸ்ஐ மருத்துவமனையில், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து தகவலின் பெயரில் செஞ்சேரி மலையில் உள்ள தாஸ் மருந்தகத்தில் கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை ஆணையர் ராஜசேகரன் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இணை இயக்குனர் ராஜசேகரனின் விசாரணையில், கடந்த 75 ஆண்டு காலமாக தாஸ் மெடிக்கல்ஸ் என்ற மருந்தகம் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த மருந்தகத்தை பால் ஜெயசீலன் என்பவர் நடத்தி வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. பால் ஜெயசீலனுக்கு விக்டர் ஜீவன் ராஜ் மற்றும் ஜான் குணசேகரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் ஜார்ஜியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றுள்ளனர். 

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மருந்தகத்தின் அருகில் கிளினிக் ஒன்றை துவக்கிய பால் ஜெயசீலன்,  முதலாவதாக நோயல் தாஸ் என்ற மருத்துவர் மூலம் மருத்துவம் பார்த்துள்ளார். பிறகு ஜெயசுதா என்ற மருத்துவர் மருத்துவம் பார்க்க, அவர் மாறுதலாகி சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து ஜான் ஜீவனேசன் என்பவர் மருத்துவம் பார்த்த வந்த நிலையில் அவரும் மாறுதலாகி சென்றுள்ளார். இதனிடையே வெளிநாட்டில் மருத்துவம் படித்த விக்டர் ஜீவன் ராஜ் மற்றும் ஜான் குணசீலன் ஆகிய இருவரும் கடந்த 9 மாதங்களாக மருத்துவமனையை கவனித்து வந்துள்ளனர். இருவரும் இந்தியாவில் மருத்துவம் பார்ப்பதற்கு எழுதக்கூடிய தேர்வான எஃப்.எம்.ஜி தேர்வு எழுதாத நிலையில். ஜான் குணசீலன் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்துள்ளார். விக்டர் ஜீவன் ராஜ் தொடர்ந்து படித்து வரும் நிலையில் ஜான் குணசீலன் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் மருத்துவம் பார்த்து வந்துள்ளது இணை ஆணையரின் விசாரணையில் அம்பலமானது. 

மேலும் விசாரணையில் மருத்துவமனைக்கான தமிழ்நாடு அரசின் உரிமம் பெறாமல் இருந்ததும், படுக்கை வசதி இல்லை என விண்ணப்பித்துவிட்டு 5 படுக்கையுடன் மருத்துவமனை நடத்தி வந்ததும், முறையாக புறநோயாளிகள் பதிவேடு, மருத்துவ கழிவுகளுக்கான உரிமம் இல்லாததும், ஏற்கனவே இருந்த மருத்துவர் ஜான் ஜீவா நேசனின் மருத்துவ சீட்டை பயன்படுத்தி இருவரும் மருத்துவம் பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

இந்த நிலையில் தான், ஜான் குணசீலன் வெளியே சென்று இருந்த நிலையில் கிளினிக்கில் இருந்த விக்டர் ஜான் ராஜ் வயிற்று வலிக்காக வந்த பிரபுவுக்கு மருத்துவம் பார்த்ததோடு ஊசி போட்டுள்ளார் என்பதையும் சுகாதாரத் துறையினர் உறுதி செய்தனர். 

இதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த அந்த கிளினிக்கில் இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்துள்ள இணை இயக்குனர் ராஜசேகரன் இது தொடர்பாக சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விக்டர் ஜான் ராஜை கைது செய்துள்ள சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow