“ஏமாற்றிய பட்ஜெட்” - வெள்ளை அறிக்கை கேட்கும் விவசாயிகள்
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தி அறிவிக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
4-வது ஆண்டாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் நுண்ணுயிர் பாசனம், மூலிகை சாகுபடி, சிறுதானிய சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதற்கு தஞ்சை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான உரிய விலை அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக அவர் கூறியிருக்கின்றனர்.
இந்த முறையாவது குறுவை சாகுபடிக்கு தமிழக அரசு காப்பீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் விவசாயிகள், நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும், கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல் என மனம் வெதும்புகின்றனர்.
அதேபோல் அரசு முன்பு அறிவித்த “திருச்சி-நாகை இடையே வேளாண் தொழில் பெருந்தடம்” திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசின் பட்ஜெட் அறிவிப்பின் மீது அதிருப்தியடைந்த விவசாயிகள் இதுவரை கடந்த 3 ஆண்டுகள் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவற்றில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?